/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடுப்பணை இல்லாத அடையாறு கிளை கால்வாய்கள் வீணாக கடலில் கலந்த 7,000 கன அடி நீர்
/
தடுப்பணை இல்லாத அடையாறு கிளை கால்வாய்கள் வீணாக கடலில் கலந்த 7,000 கன அடி நீர்
தடுப்பணை இல்லாத அடையாறு கிளை கால்வாய்கள் வீணாக கடலில் கலந்த 7,000 கன அடி நீர்
தடுப்பணை இல்லாத அடையாறு கிளை கால்வாய்கள் வீணாக கடலில் கலந்த 7,000 கன அடி நீர்
ADDED : டிச 03, 2024 12:58 AM

தாம்பரம், ட
காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தை அடுத்த ஆதனுாரில் இருந்து துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரஜராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
இந்த ஆறு, 42 கி.மீ., நீளம் செல்கிறது. ஆரம்பத்தில், 60 முதல் 200 அடியாக இருந்த ஆற்றின் அலகம், கரையோர ஆக்கிரமிப்பால், 20 முதல் 100 அடி வரையாக சுருங்கிவிட்டது. இதனால், பரவலாக மழை பெய்தாலே, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும்.
ஆக்கிரமிப்புகள்
கடந்த 2015ல் பெய்த கன மழையில், 10 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் ஓடியதால், ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, வரதாஜபுரம், முடிச்சூர், அனகாபுத்துார், திருநீர்மலை, கவுல்பஜார் ஆகிய பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாயின. அப்போது, ஒரு லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலந்தது.
இந்த பாதிப்பை தொடர்ந்து, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்துார் பகுதிகளில், ஆற்றங்கரை ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஆதனுார் முதல் மணப்பாக்கம் வரை, 22 கி.மீ., துாரத்திற்கு, 19 கோடி ரூபாய் செலவில், அடையாறு ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தினர்.
இதனால், பல இடங்களில் ஆறு பரந்து, விரிந்து காணப்படுகிறது. இதற்கு முன், ஒரு நாளைக்கு, 10 செ.மீ., மழை பெய்தாலே, அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள நகர்ப்புறங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது.
தற்போது, நாள் ஒன்றுக்கு, 15 செ.மீ., மழை பெய்தாலும், வெள்ளத்தை தாங்கும் அளவிற்கு, ஆறு அகலமாக உள்ளது.
அதேநேரம், இணைப்பு கால்வாய்கள் வழியாக வரும் மழைநீர், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர், அடையாறு ஆற்றில் கலந்து, ஒவ்வொரு மழையின் போதும், பல டி.எம்.சி., தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.
ரசாயன கழிவுகள்
உபரி நீர் வீணாவதை தடுக்க, முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, திருநீர்மலை அருகே தடுப்பணை கட்ட ஆய்வு நடந்தது. ஆற்றில் தோல் மற்றும் ரசாயன கழிவுகள் கலப்பதால், தடுப்பணை கட்டினால் நீரின் தன்மை மாறிவிடும் என, திட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழை விட்டு, சில மாதங்களில் ஆறு வறண்டு விடுகிறது.
இந்த மழையில், ஆற்றில் முழு அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நவ., 30, மதியம் 2:00 முதல் டிச., 1, மதியம் 2:00 மணி வரை, வினாடிக்கு 6,000 - 7,000 கன அடி தண்ணீர் வீணாக வெளியேறியது.
அடையாறு ஆறு மற்றும் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி இருந்தால், பெரும் அளவில் தண்ணீரை தேக்கி, கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை தவிர்த்திருக்கலாம்.
மாவட்ட நிர்வாகம் இதை உணர்ந்து, அடையாறு ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில், தேவைக்கேற்ப சிறிய தடுப்பணைகளை கட்ட முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.