/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
9,396 வீடுகள் விற்பனை 'கிரெடாய்' தகவல்
/
9,396 வீடுகள் விற்பனை 'கிரெடாய்' தகவல்
ADDED : டிச 24, 2024 12:47 AM

சென்னை, நடப்பு ஆண்டில், செப்., இறுதி வரையிலான காலத்தில், சென்னையில், 9,396 வீடுகள் விற்பனையாகி உள்ளதாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், சென்னை பிரிவு தலைவர் முகமது அலி தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நடப்பு ஆண்டின் துவக்கத்தில் ரியல் எஸ்டேட் சந்தை சற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், பல்வேறு சவால்களை சமாளித்து இத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 19,109 வீடுகள் அடங்கிய, 182 குடியிருப்பு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 9,396 வீடுகள் விற்பனையாகி உள்ளன.
இந்த ஆண்டு நிறைவடையும் சமயத்தில், வீடு விற்பனை சந்தை நிலவரம் நல்ல நிலையில் உள்ளது.
நடப்பு ஆண்டின், நான்காவது காலாண்டில், வீடு விற்பனை, 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும், புதிய திட்டங்கள் வருகை 10 முதல், 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
அடுத்து வரும் 2025ல், வீடு விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரையிலும், புதிய திட்டங்கள் வருகை 15 முதல், 20 சதவீதம் வரையிலும் அதிகரிக்கும். மெட்ரோ ரயில் திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களால், 2025ல் வீடுகள் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நடப்பு ஆண்டில் தென்சென்னையில் மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, போரூர் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
வட சென்னையில் மணலி, கொருக்குபேட்டையிலும், மத்திய சென்னையில் தி.நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
மேற்கு சென்னையில், அம்பத்துார், ஆவடி பகுதிகளில் நடுத்தர பிரிவு மக்கள் வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். போக்குவரத்து சார்ந்த மேம்பாடு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
சாலை தொகுப்பு திட்டம், நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டு பணிகளால், புறநகர் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வீடு கட்டுமான திட்டங்கள் அதிகரிக்கும்.
கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை அரசு தரப்பில் எளிதாகவும், விரைவாகவும் மேற்கொண்டால் வீடு ஒப்படைப்பை விரைவுபடுத்தலாம்.
புதிதாக செயல்படுத்தப்படும் குடியிருப்பு திட்டங்களுக்கு மின்மாற்றிகள், மின் இணைப்புகள் வழங்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
புதிதாக வீடு வாங்குவோரை ஊக்குவிப்பது, பெண்களுக்கு பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தீர்வை தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்குவதால், இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.