/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி 'ரேஸ் கிளப்'பில் மீட்ட 118 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா
/
கிண்டி 'ரேஸ் கிளப்'பில் மீட்ட 118 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா
கிண்டி 'ரேஸ் கிளப்'பில் மீட்ட 118 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா
கிண்டி 'ரேஸ் கிளப்'பில் மீட்ட 118 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா
ADDED : செப் 23, 2024 06:25 AM
சென்னை : 'சென்னை கிண்டி ரேஸ் கிளப் பயன்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட, 118 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில், 160 ஏக்கர் நிலம், 1945ல், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அரசிடம் இருந்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட நிலம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால், குத்தகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலத்தை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா, பசுமை பரப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட, 4,832 கோடி ரூபாய் மதிப்பிலான, 118 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையிடம், நில மாற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
நகரமயமாக்கல், பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, இதுவரை பூங்காக்கள் அமைக்காத இடங்களில், பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது.
சென்னை மக்களின் உடல் நலனுக்காகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், பசுமையான சூழலை கொண்ட பூங்காக்கள் அவசியம்.
அதன்படி, சென்னை கதீட்ரல் சாலையில், கருணாநிதி நுாற்றாண்டு பூங்காவும், ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கிண்டியில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாக்கப்படும் இந்த பூங்கா பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.