/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்தும் மர்ம கும்பல் அராஜகம்
/
கல்லுாரி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்தும் மர்ம கும்பல் அராஜகம்
கல்லுாரி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்தும் மர்ம கும்பல் அராஜகம்
கல்லுாரி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்தும் மர்ம கும்பல் அராஜகம்
ADDED : செப் 25, 2025 12:59 AM
சென்னை, டி.எம்.எஸ்., அருகே, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த, கல்லுாரி மாணவனிடம் வீண் தகராறு செய்து, எட்டு பேர் கும்பல் தாக்குதல் நடத்தியது. பின், ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற மாணவனை, அங்கு வைத்தும் அடித்து, உதைத்து அதே கும்பல் அட்டூழியம் செய்துள்ளது.
தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சுல்தான், 20; லயோலா கல்லுாரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவர்.
நேற்று முன்தினம் இரவு, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நண்பர் ஹரியுடன், அங்குள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த எட்டு பேர் கும்பல், சுல்தானிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளது. பின், கைகளாலும், அங்கு கிடந்த மரக்கட்டைகளாலும் அவரை சரமாரியாக தாக்கியது. தடுக்கவந்த ஹரியையும் தாக்கியது.
மேலும், முகமது சுல்தானின் மொபைல் போன் எண்ணை பெற்றுக்கொண்டு, 'அழைக்கும்போதெல்லாம் மயிலாப்பூர் வர வேண்டும். நடந்த சம்பவத்தை போலீசுக்கோ, காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கோ செல்லக்கூடாது' என, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது.
இதையடுத்து, காயமடைந்த சுல்தான், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார்.
அங்கு வந்த அதே கும்பல், சொன்னதையும் மீறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவாயா என கேட்டு, அங்கு முகமது சுல்தான் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அவருடன் வந்த முகுந்த் என்பவரையும், அந்த கும்பல், அடித்து, உதைத்து அட்டூழியம் செய்தது.
இதுகுறித்து முகமது சுல்தான், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், 'என் நண்பர்களான ஹரி, முகுந்த் ஆகிய இருவரையும் தாக்கிய கும்பல், நான்கரை சவரன் செயினையும் பறித்துச் சென்றுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட எட்டு பேர் கும்பலை பிடிக்க, தனிப்படை ஒன்றை அமைத்துள்ளனர்.