/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சித்தேரியில் பூங்கா அமைக்க கோரிக்கை
/
சித்தேரியில் பூங்கா அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 12:30 AM

மேடவாக்கம், மேடவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதியில், 1970களில் இருந்த சிறு, குறு, தாங்கல் ஏரிகள், படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகளாகவும், வணிக கட்டடங்களாகவும் மாறிவிட்டன.
இந்நிலையில், மீதமுள்ள பெரிய ஏரி, கோலேரி, அணை ஏரி, விஜயநகரம் ஏரி மற்றும் சித்தேரி ஆகிய நான்கு ஏரிகளும் 40 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு, எஞ்சிய பகுதியே நீர்த்தேக்கமாக உள்ளது.
இதில், சித்தேரி மிகுந்த கவலைக்கிடத்தில் உள்ளது. 3 சதுர கி.மீ., பரப்புள்ள சித்தேரியின் கரைப் பகுதிகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பகுதி மக்கள் கூறியதாவது:
மேடவாக்கம் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், போக்கு கால்வாய் வழியாக சித்தேரியை வந்தடைகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரி நீர், பள்ளிக்கரணை அணை ஏரியை சென்றடைகிறது.
சித்தேரியின் நீர்வரத்துப் பாதையும், நீர் வெளியேறும் பாதையும் புதர் மண்டி, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது.
தவிர, ஏரி முழுதும் ஆகாய தாமரைகளால் நிரம்பி உள்ளன. குப்பை கழிவுகள் நிறைந்து, செடி, கொடி, மரங்கள் முளைத்து, புதர் மண்டி, அழிவின் விளிம்பில் உள்ளது.
ஒரு காலத்தில் குடிநீராக பயன்படுத்திய ஏரியில் தற்போது கழிவுநீர் கலந்து சாக்கடையாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சித்தேரியை சீரமைக்க வேண்டும்.
அதில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் நடைபயிற்சிக்கு பாதை உருவாக்க வேண்டும். இதனால், ஏரியின் பாதுகாப்பு உறுதியாகும். தவிர, இப்பகுதிமக்கள் பொழுது போக்கும் இடமாகவும் மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.