/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோசமான ரயில்வே சாலை சீரமைப்பு பல ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
/
மோசமான ரயில்வே சாலை சீரமைப்பு பல ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
மோசமான ரயில்வே சாலை சீரமைப்பு பல ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
மோசமான ரயில்வே சாலை சீரமைப்பு பல ஆண்டு பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ADDED : டிச 18, 2024 12:12 AM

வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.
இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.
முக்கியதுவம் வாய்ந்த இந்த சாலையில், குறைந்தபட்ச பராமரிப்பு கூட இல்லாமல் ரயில்வே அலட்சியமாக இருந்தது.
தவிர, குண்டும், குழியுமான இச்சாலையில் ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி, புதிய சாலை அமைக்காமல் இருந்தது.
இதுகுறித்தது நம் நாளிதழில் பல முறை சுட்டிக்காட்டிய பின், 2022 ஆக., 5ல் ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. புதிய சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
அங்கு, ஒரு பகுதியில் மட்டும் சிமென்ட் சாலை அமைத்த ரயில்வே, பணியை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக விட்டது.
இதனால், சாலையில் சிமென்ட் பெயர்ந்து ஜல்லியாக சிதறி கிடந்ததால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்தனர். மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
இதுகுறித்தும், நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியான நிலையில், கடந்த செப்., மாதம், ரயில்வே துறை திட்ட அறிக்கை தயார் செய்து, புதிய சாலையை அமைக்கும் பணியை துவங்கியது.
தற்போது ரயில் நிலையத்தில் இருந்து, அங்குள்ள சுரங்கப்பாலம் வரை, புதிய சிமென்ட் சாலையை அமைத்துள்ளது.
இருப்பினும், விடுப்பட்டுள்ள மற்றொரு பாதையான புதிய மேம்பாலம் வரையும் புதிய சாலையை அமைத்து, சாலையோரங்களில் அரைகுறையான பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
'தினமலர்' நாளிதழுக்கு நன்றி
பல கோடி ரூபாய் செலவில், குறிப்பிட்ட துாரம் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. பணிகள் பாதியில் விடப்பட்டதால், லேசான மழை பெய்தாலே, சாலை முழுதும் குளம் போல் காட்சியளித்தது. சீரமைப்பில், ரயில்வேயும், மாநகராட்சியும் மாறி மாறி கைக்காட்டியது. தொடர் செய்தியால் புதிய சாலை கிடைத்துள்ளது. வில்லிவாக்கம் மக்கள் சார்பில், 'தினமலர்' நாளிதழுக்கு மிக்க நன்றி.
- ரா.கிட்டு,
வியாபாரி, வில்லிவாக்கம்