/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுதலாக இணைப்பு வாகனங்கள் இயக்க மெட்ரோவில் துணை நிறுவனம் வருகிறது
/
கூடுதலாக இணைப்பு வாகனங்கள் இயக்க மெட்ரோவில் துணை நிறுவனம் வருகிறது
கூடுதலாக இணைப்பு வாகனங்கள் இயக்க மெட்ரோவில் துணை நிறுவனம் வருகிறது
கூடுதலாக இணைப்பு வாகனங்கள் இயக்க மெட்ரோவில் துணை நிறுவனம் வருகிறது
ADDED : செப் 06, 2025 11:19 PM
சென்னை :மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு வாகனங்கள் இயக்கும் வகையில், தனியாக துணை நிறுவனம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் சென்று, வர வசதியாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி பயணம் செய்வோர் எண்ணிக்கை நான்கு லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடியும் போது, பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பயணியர் தடையின்றி வந்து செல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் சேவையின் பயன்களை சமீபகாலமாக பயணியர் அதிகளவில் உணரத் துவங்கியுள்ளனர். இதனால், தினசரி பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் சராசரியாக, நான்கு லட்சத்தை கடந்துள்ளது.
பயணியரின் வருகையை அதிகரிக்க இணைப்பு வாகன வசதி என்பது முக்கியமானதாக இருக்கிறது. மாநகர பேருந்துகள், சிற்றுந்துகள் மட்டுமே போதாது.
எனவே, தனியாக புதிய துணை நிறுவனத்தை துவங்க உள்ளோம். இதற்காக, மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம்.
இதற்கான, ஒப்புதல் கிடைத்தவுடன், கால்டாக்சி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்களை, ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய நிலையங்களில் இருந்து 10 கி.மீ., துாரமும், சிறிய நிலையங்களில் இருந்து 5 கி.மீ., துாரம் வரை, இணைப்பு வாகனங்கள் இயக்கப்படும்.
முதல்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்கப்படும். அடுத்த கட்டமாக, இந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இணைப்பு வாகனங்களில் நியாயமான அளவில் கட்டணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.