/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.7 கோடியில் அமைகிறது தற்காலிக பேருந்து நிலையம் ஏப்ரலில் பிராட்வே நிலையத்தை இடிக்க நடவடிக்கை
/
ரூ.7 கோடியில் அமைகிறது தற்காலிக பேருந்து நிலையம் ஏப்ரலில் பிராட்வே நிலையத்தை இடிக்க நடவடிக்கை
ரூ.7 கோடியில் அமைகிறது தற்காலிக பேருந்து நிலையம் ஏப்ரலில் பிராட்வே நிலையத்தை இடிக்க நடவடிக்கை
ரூ.7 கோடியில் அமைகிறது தற்காலிக பேருந்து நிலையம் ஏப்ரலில் பிராட்வே நிலையத்தை இடிக்க நடவடிக்கை
ADDED : ஜன 21, 2025 12:14 AM

பிராட்வே,
சென்னை பிராட்வே பேருந்து நிலையம், 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர், அடையாறு, வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க பிராட்வே பேருந்து நிலையம், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், அடிப்படை வசதிகளின்றி படுமோசமான நிலையில் காட்சியளித்தது.
பல ஆண்டு கோரிக்கைக்குபின், பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில், 822.70 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.
விரைவில், பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கும் பணிகள் துவங்க உள்ள நிலையில், ராயபுரம் மேம்பாலம் அருகில் துறைமுகத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காலி இடத்தில், 7 கோடி ரூபாய் செலவில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, அடர்ந்து வளர்ந்திருந்த செடி, கொடிகள் 'பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றி, இடத்தை சமன்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கையை அடுத்து, புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பிராட்வே பேருந்து நிலையஅமைக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 200 கோடி ரூபாய், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 115 கோடி ரூபாய், டுபிட்கோ மூலம், 506 கோடி ரூபாய் மற்றும் சென்னை மாநகராட்சியின் பங்களிப்பை சேர்த்து, பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பிராட்வே பேருந்து நிலையத்தில், எட்டு மாடி பேருந்து முனையமும், அதில் வணிக வளாகங்களும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. தற்போது தற்காலிக பேருந்து நிலையத்திற்கான இடத்தை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
பின் மேற்கூரை, பஸ் நிறுத்தும் இடம், தற்காலிக கழிப்பறைகள், ஓய்வறைகள், டிக்கெட் கவுன்டர்கள், நாற்காலிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளன. பணிகள் விரைந்து முடிந்து ஏப்ரல் மாதத்தில், தற்காலிக பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

