/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது
/
தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது
ADDED : ஜன 03, 2024 12:20 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில், 'டாஸ்மாக்' கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 27, என்பவர் பெட்டி கடை நடத்தி வந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு அவரது கடைக்கு வந்த மர்ம கும்பல், ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பித்தது.
இது தொடர்பாக, செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பகுதியைச் சேர்ந்த செந்தில், 20, வந்தவாசி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற பாம்பே சரவணன், 29 என்பவர் உள்ளபட மூன்று பேர் மீது செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சரவணனை தவிர மற்ற அனைவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மும்பைக்கு தப்பியோடிய சரவணன், அங்கு பெரிய தாதாவாக வலம் வந்துள்ளார். பின், குண்டர் சட்டத்தில் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாசிக் சிறையில் சரவணன் இருப்பதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் நாசிக் விரைந்தனர். நாசிக் சிறையில் இருந்து விடுதலையான சரவணனை கைது செய்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
தீவிர விசாரணைக்கு பின் சரவணன், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.