/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேரன் விரைவு ரயிலில் 'ஏசி' பழுது அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
/
சேரன் விரைவு ரயிலில் 'ஏசி' பழுது அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
சேரன் விரைவு ரயிலில் 'ஏசி' பழுது அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
சேரன் விரைவு ரயிலில் 'ஏசி' பழுது அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
ADDED : அக் 22, 2024 12:17 AM
சென்னை,சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10:00 மணிக்கு, சேரன் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 10:00 மணிக்கு, ரயில் புறப்பட தயாராக இருந்தபோது, ரயிலின் 'பி2' பெட்டியில் 'ஏசி' இயங்கவில்லை.
ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால், புழுக்கம் அதிகரித்து பயணியருக்கு வியர்த்து கொட்டியது.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர், 'ஏசி' பராமரிப்பாளரிடம் பயணியர் புகார் தெரிவித்தனர். அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால், பயணியர் ஆத்திரமடைந்தனர்.
இதற்கிடையில், சேரன் விரைவு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது, பயணியர் சிலர், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயில்வே ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர், ரயில்வே பாதுகாப்பு படையினர், அபாய சங்கிலியை இழுத்த பெட்டிக்கு விரைந்தனர்; அங்கிருந்தோரிடம் விசாரித்தனர். அப்போது, இந்த பெட்டியில் 'ஏசி' இயங்கவில்லை. அதை சரிசெய்யாததால், அபாய சங்கிலியை இழுத்தோம் என, பயணியர் தெரிவித்தனர்.
'ஏசி' பெட்டியில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திய பின், ரயிலை இயக்கும்படி பயணியர் கூற, அவர்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, 'ஏசி' பெட்டியில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கும் பணியில் 'ஏசி' பராமரிப்பாளர்கள் ஈடுபட்டனர்.
பழுது நீக்கப்பட்டு, 'ஏசி' செயல்பட துவங்கியதும், ரயில் 50 நிமிடம் தாமதமாக, இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது.