/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாடி மேம்பால சர்வீஸ் சாலையில் குப்பை, கட்டட கழிவுகள் குவிப்பு
/
பாடி மேம்பால சர்வீஸ் சாலையில் குப்பை, கட்டட கழிவுகள் குவிப்பு
பாடி மேம்பால சர்வீஸ் சாலையில் குப்பை, கட்டட கழிவுகள் குவிப்பு
பாடி மேம்பால சர்வீஸ் சாலையில் குப்பை, கட்டட கழிவுகள் குவிப்பு
ADDED : செப் 28, 2024 12:28 AM

வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் அத்துமீறி கொட்டப்படும் குப்பை மற்றும் கட்டட கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சென்னையில் முக்கிய மேம்பாலங்களில், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடி மேம்பாலமும் ஒன்று. பாடி, வில்லிவாக்கம், கொரட்டூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களை, இந்த பாடி மேம்பாலம் இணைக்கிறது.
இந்த மேம்பாலத்தால், போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால், சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக, திருமங்கலத்தில் இருந்து பாடியை நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலையில், குப்பை அதிக அளவில் குவிக்கப்பட்டு, குப்பைக் கிடங்கு போல் காட்சியளிக்கிறது.
இந்த சாலையோரத்தில், ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைத்திருந்தும், குப்பை அதிக அளவில் தேங்குகிறது. குப்பை மட்டுமின்றி கட்டட கழிவுகளும், பழைய பொருட்களும் அத்துமீறி கொட்டப்பட்டுள்ளன.
இதனால், அவ்வழியாகச் செல்வோர், சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, மேம்பாலத்தில் செல்லும் போதே கடும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதை கண்காணித்து, இப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.