/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார் மனைவி குறித்து நடிகர் ரவி மோகன் விமர்சனம்
/
என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார் மனைவி குறித்து நடிகர் ரவி மோகன் விமர்சனம்
என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார் மனைவி குறித்து நடிகர் ரவி மோகன் விமர்சனம்
என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார் மனைவி குறித்து நடிகர் ரவி மோகன் விமர்சனம்
ADDED : மே 15, 2025 11:23 PM
சென்னை:நடிகர் ரவி மோகன், தன் காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டிய ரவி, சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில், அவருடன் ஜோடியாக பங்கேற்றார்.
இதற்கு ஆர்த்தி, 'தினமும் நான் கண்ணீரில் தவித்தேன். தந்தை என்பது வெறும் பெயர் அல்ல, பொறுப்பு' என, காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு பதிலளித்து, நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை:
என் தனிப்பட்ட விஷயங்கள், பொது மேடையில் விவாதிக்கப்படுவதை பார்க்கும் போது வலிக்கிறது. என் மவுனம் பலவீனம் அல்ல. அவர்களின் லாபத்திற்காக, என்னை ஒரு கருவியாக கையாண்டனர். என் பிள்ளைகளை கூட பார்க்க விடவில்லை. பாதுகாவலர்களை வைத்து தடுக்கின்றனர். என் முன்னாள் மனைவிக்கும், குடும்பத்திற்கும் ஆதரவாகவே நான் இருந்தேன். இதை, என் பிள்ளைகளும் ஒருநாள் உணர்வர். நான், என் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்தேன்; மகன்களை அல்ல.என் வாழ்வு என் இரண்டு மகன்களுக்காகவே.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, என் பெற்றோருடன் உறவாட கூட அவர்கள் தடை விதித்தனர். என் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்காக மட்டுமே என்னை பயன்படுத்தினர். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார். மவுனத்திற்கும் ஒரு எல்லை உண்டு. நான் அமைதியாகவே பிரிந்து சென்றேன். பல முறை என் பெயரில், கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்.
இதனால், என் சொத்துக்களை இழந்தேன். 10 நாட்களுக்கு முன்னர் கூட, அவரது தாய் என்னை கடன் உத்தரவாதம் அளிக்கும்படி மீண்டும் கட்டாயப்படுத்தினார். இது தான் அவர்களது நிஜ முகம். என் முன்னாள் மனைவியும், அவரது தோழிகளும் என்னை பற்றி தவறாக சித்தரித்து செய்தி பரப்பினர். என்னை சில நடிகைகளுடன் தவறாக இணைத்து, சில உண்மையற்ற கிசுகிசு செய்திகளை பரப்பினர்.
வாழ்க்கை துணை
கெனிஷா பிரான்சிஸ் என் நண்பராக இருந்தவர். பணம், கார், சொத்து, ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு, வெறுங்காலுடன் நான் வீட்டை விட்டு வெளியேறிய போதும், எனக்காக நின்றவர் அவர். சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஒரு அழகான துணை கெனிஷா. என் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர்.
நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை, எனக்கு நினைவூட்டியதும் அவர் தான். அவரின் நடத்தை, தொழிலை அவமதிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். என் வாழ்நாளில் என்னை உண்மையில் புரிந்து கொண்டவர்கள் யார், என்னை பயன்படுத்தியவர்கள் யார் என்று, எனக்குத் தெரியும். யாரும் என் வாழ்க்கையை வீழ்த்த முடியாது. என் மீதும், அவர் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மன வேதனையை தந்தன.
இதுவே என் கடைசி அறிக்கை. இதையும் அவர்கள் பெரிதாக்குவர். ஒரு குடிமகனாக, சட்டத்தை மதிக்கிறேன். நான் இப்போது எடுத்த முடிவுகளால் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கிறேன். இதற்கு முன் என் வாழ்வில் இவ்வளவு நிம்மதியை உணர்ந்ததில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.