/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகர், அடையாறு, ஆலந்துார் பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் கிடைக்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீருக்கான குழாய் பதிப்பு பணி நிறைவு

ADDED : ஆக 03, 2025 12:21 AM
சென்னை, செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, இரண்டாவது கட்டமாக, 20 கி.மீ., துாரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட குழாய் பதிப்பு பணி, நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
ஓரிரு நாட்களில் வெள்ளோட்டம் முடிந்து, அண்ணா நகர், அடையாறு, தேனாம் பேட்டை உள்ளிட்ட மண்டலங்களுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இது, சென்னையின் மூன்று மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீர், குழாய் வழியாக சென்னையின் பல பகுதிகளுக்கு 2007 முதல் வினியோகிக்கப்படுகிறது.
அதிகப்படியான வளர்ச்சி காரணமாக, தொழில் நிறுவனங்கள், வீடு, கடைகளின் குடிநீர் தேவை அதிகரித்ததால், அதன் வினியோகத்தை இரு மடங்காக உயர்த்த, சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்தது.
இதற்காக, 66.78 கோடி ரூபாயில், 3,000 மி.மீ., விட்டம் உடைய குழாய் பதிக்கும் பணி, சில ஆண்டுகளுக்கு முன், இரண்டாவது கட்டமாக துவங்கியது.
செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூர், பூந்தமல்லி புறவழிச்சாலை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில், குழாய் பதிப்பு பணிகள் நடந்து வந்தன.
பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் வெளியேறியது, புதிய நிறுவனம் நியமனம், நெடுஞ்சாலைத் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட தடங்களுக்கு பின், குழாய் பதிப்பு பணி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது 26.5 கோடி லிட்டர் குடிநீர், சென்னைக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக மேற்கொண்ட குழாய் பதிப்பு பணி முடிந்துவிட்டது. ஓரிரு நாட்களில் இதன் வெள்ளோட்டம் துவங்கும். செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு தினம் 53 கோடி லிட்டர் சென்னை முழுதும் வினியோகிக்கப்படும்' என்றனர்.