/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ' தடங்களில் கூடுதல் எப்.எஸ்.ஐ., அனுமதி. கிடப்பில் போட்டாச்சு! 2 ஆண்டாகியும் பரிந்துரைகளை துாசி தட்டாத அரசு
/
'மெட்ரோ' தடங்களில் கூடுதல் எப்.எஸ்.ஐ., அனுமதி. கிடப்பில் போட்டாச்சு! 2 ஆண்டாகியும் பரிந்துரைகளை துாசி தட்டாத அரசு
'மெட்ரோ' தடங்களில் கூடுதல் எப்.எஸ்.ஐ., அனுமதி. கிடப்பில் போட்டாச்சு! 2 ஆண்டாகியும் பரிந்துரைகளை துாசி தட்டாத அரசு
'மெட்ரோ' தடங்களில் கூடுதல் எப்.எஸ்.ஐ., அனுமதி. கிடப்பில் போட்டாச்சு! 2 ஆண்டாகியும் பரிந்துரைகளை துாசி தட்டாத அரசு
ADDED : மார் 13, 2026 05:09 AM

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில் வழித்தடங்களில், புதிய கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு வழங்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்தது. சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையிலும், இன்னும் திட்டத்தை செயல்படுத்தாமல், அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பெருநகரில், தற்போது இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் திட்டம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில், பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில், தேவையான வசதிகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.
இதன்படி, மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில் ஆகிய வழித்தடங்களில் இரண்டு பக்கத்திலும், 500 மீட்டர் அதாவது, 1,640 அடி வரையிலான பகுதிகளில், கட்டடங்களுக்கு கூடுதல் தளபரப்பு குறியீடு வழங்க அரசு முடிவு செய்தது.
இதற்காக நியமிக்கப்பட்ட கலந்தாலோசனை நிறுவனம், அரசுக்கு அளித்த பரிந்துரை:
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய இரண்டு வழித்தடம், பணிகள் நடக்கும் மூன்று வழித்தடங்கள், கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான மேம்பால ரயில் வழித்தடம். சென்னை கடற்கரை - வண்டலுார், கடற்கரை - மீஞ்சூர், சென்னை சென்ட்ரல் - திருநின்றவூர் ஆகிய மின்சார ரயில் வழித்தடங்கள், அண்ணா சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய வழித்தடங்கள் கூடுதல் தளபரப்பு குறியீடு வழங்க தேர்வு செய்யப்பட்டன.
இந்த வழித்தடங்களில், தற்போது இயல்பாக அளிக்கப்படும் இரண்டு மடங்குக்கு பதிலாக, 3.25 மடங்கு வரை தளபரப்பு குறியீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக, 6 மடங்கு வரை கட்டடங்களுக்கு தளபரப்பு குறியீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இதையேற்ற தமிழக அரசு, கூடுதல் எப்.எஸ்.ஐ., திட்டம் நடைமுறைக்கு வரும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை; அதற்கான அரசாணை கூட வெளியிடப்படவில்லை.
ஏமாற்றம்தான் இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
சென்னையில் பொது போக்கு வரத்து மேம்பாடு அடிப்படையில், கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. இதற்கான பரிந்துரைகள் பெற்ற அரசு, இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இதற்கு தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில், காலி நிலம் வாங்கி குடியிருப்பு கட்டவும், பழைய குடியிருப்புகளை இடித்து புதிதாக கட்டுவோரும் கூடுதல் எப்.எஸ்.ஐ., கிடைக்கும் என காத்திருக்கின்றனர். சட்டசபை தேர்தல் காலமும் நெருங்கிவிட்ட நிலையில், அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாத்தியமா? இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் வழித்தடங்களில் கட்டடங்கள் கட்டுவோர், பிரீமியம் எப்.எஸ்.ஐ., வாங்கினால், அதற்கான கட்டணத்தில், 25 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, இயல்பான எப்.எஸ்.ஐ.,யை தற்போது இருப்பதில், 50 சதவீதம் வரை கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான கலந்தாலோச னை நிறுவன பரிந்துரை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான கோப்புகள் அரசின் அனுமதிக்காக காத் திருக்கின்றன.
அமைச்சரவை கூட்டம் நடத்தி, ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிட வேண்டும். தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த பணிகள் சாத்தியமா என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

