/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச ரயில் கண்காட்சி பெரம்பூரில் துவக்கம்
/
சர்வதேச ரயில் கண்காட்சி பெரம்பூரில் துவக்கம்
ADDED : மார் 13, 2026 05:11 AM

சென்னை: பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி துவங்கி உள்ளது.
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் ஐ.சி.எப்., சார்பில் சர்வதேச கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப மாநாட்டை ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் நேற்று துவக்கி வைத்தார். வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.
இதில், இந்தியா உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த, 120 முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.
சாதாரண ரயில் பெட்டிகள் முதல் இ.எம்.யு., ரயில்கள், அதிநவீன 'வந்தே பாரத்' ரயில்களுக்கு தேவையான சிறிய நட்டுகளில் துவங்கி, ரயில் பெட்டிகளின் பக்கவாட்டு சுவர்கள், பெரிய அளவிலான உதிரி பாகங்கள் வரை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் கூறுகையில், ''ஐ.சி.எப்., இதுவரை 80,000த்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தி மூலம், 18.65 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, ஐ.சி.எப்., தன் சொந்த தேவைக்கும் அதிகமாக பசுமை ஆற்றலை பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு, 240 கி.மீ.,யில் இருந்து 1,000 ஆக உயர்ந்துள்ளது, விரைவில், 2,000 கி.மீ., ஆக விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.

