/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட ஹிந்து அமைப்புகளுக்கு அறிவுரை
/
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட ஹிந்து அமைப்புகளுக்கு அறிவுரை
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட ஹிந்து அமைப்புகளுக்கு அறிவுரை
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட ஹிந்து அமைப்புகளுக்கு அறிவுரை
ADDED : ஆக 22, 2025 12:17 AM
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு ஹிந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திக்கேயன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஹிந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பா.ஜ., பாரத் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்தாய்வில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்காக போலீசார் தரப்பில் வழங்கப்பட்ட அறிவுரைகள்:
* விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்
* தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்
* சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்
* நிறுவப்படும் சிலையின் உயரம், அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது
* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்
* மதவாத வெறுப்புணர்ச்சியை துாண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது
* சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்
* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள் - விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது
* தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்
* விநாயகர் சிலைகளை கரைக்க, காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்
* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.
இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.