/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
29ல் பெருங்களத்துாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
29ல் பெருங்களத்துாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 12:33 AM
சென்னை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
பெருங்களத்துார், பீர்க்கன்கரணை பகுதிகளில், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட தி.மு.க., அரசும், தாம்பரம் மாநகராட்சியும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் துார்வாரப்பட்ட பீர்க்கன்கரணை ஏரி, ஆகாயத்தாமரையால் மூடப்பட்டு, கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது.
பெருங்களத்துாரில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம், வணிக வளாகம், அங்கன்வாடி மையம், நாய்கள் கருத்தடை மையம் ஆகியவை நீண்ட காலமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் பூங்காக்கள் சமூக விரோதிகளின் மதுக்கூடங்களாக மாறியுள்ளன.
பராமரிப்பில்லாத சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், கழிவுநீர் கால்வாய்கள், பழுதடைந்த சாலைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால், மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், தாம்பரம் மாநகராட்சியையும் கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில், வரும் 29ம் தேதி மாலை 4:00 மணிக்கு, பெருங்களத்துார், பெருமாள் கோவில் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பி., சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

