/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐஸ்வர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு * 100 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை
/
ஐஸ்வர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு * 100 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை
ஐஸ்வர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு * 100 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை
ஐஸ்வர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு * 100 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை
ADDED : ஜன 19, 2025 09:56 PM
சென்னை:''வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக இந்தியா வருவோரில், 25 சதவீதம் பேர் தமிழகம் வருகின்றனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, ஓ.எம்.ஆர்., - எஸ்.ஆர்.பி.டூல்ஸ் சந்திப்பில், ஐஸ்வர்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திறக்கப்பட்டது. மருத்துவமனையை திறந்து வைத்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தியாவில், 60க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நிறுவி, மிக சிறப்பான மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கிற ஐஸ்வர்யா மருத்துவ குழுமம் இன்று, ஓ.எம்.ஆரில் புதிய பல்நோக்கு மருத்துவமனையை திறந்துள்ளது. மேலும், 100 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சையை செய்ய முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய சுற்றுலாத்துறை வெளியிட்ட புள்ளி விபரப்படி, மருத்துவ சிகிச்சைக்காக, 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மக்கள் இந்தியா வருகின்றனர். அவர்களில், 25 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் பெரிய புரட்சி செய்து கொண்டிருக்கின்றன. அரசும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்து, பல்வேறு சாதனைகள் படைத்து கொண்டிருக்கின்றன.
'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48' திட்டத்தில், விபத்து நடந்தால், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால், 3 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் சிவகுமார் பேசியதாவது:
இதய அறுவை சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில், இங்கு, 100 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்வது பெருமையாக இருக்கிறது. சூரியன் உதிக்கும் முன் எழுந்து, அரை மணி நேரம் நடைபயிற்சி செய்து, சரியான நேரத்தில் உணவு எடுத்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். வேலைப்பழு காரணமாக நேரம் தவறி சாப்பிடுவோர் அதிகரித்துள்ளனர். பணத்தை விட உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐஸ்வர்யா மருத்துவ குழும தலைவர் வேலுசாமி கூறுகையில், ''எங்கள் மருத்துவமனையில், 72 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப புதிய மருத்துவ தொழில்நுட்பம் சேர்க்கப்படும். ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்குகிறோம். அனைவருக்கும் உலக தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மருத்துவமனையை திறந்துள்ளோம்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா மருத்துவ குழுமத்தின் நிறுவனர் சந்திரலேகா, ஐஸ்வர்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அருண் முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.