/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழி சாலையாக மாற்றம்
/
ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழி சாலையாக மாற்றம்
ADDED : ஜூலை 18, 2025 12:13 AM

சென்னை, அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாக, ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனால், இச்சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து வானவில் பகுதி வரை புதிதாக இரும்பு மேம்பாலம் கட்டுமான பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணியால், இச்சாலையின் அகலம் குறைந்து 'பீக்ஹவர்ஸ்' நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவற்றை குறைக்கும் விதமாக அண்ணாசாலையை ஒட்டியுள்ள ஒருவழிச்சாலைகளை இருவழியாகவும், மேம்பாலங்களை இருவழியாகவும் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நந்தனம் பகுதியை இடைமறித்து செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருவழிப்பாதையான ஆழ்வார்பேட்டை மேம்பாலம், தற்போது இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது.
அதற்காக, மேம்பாலத்தின் நடுவே பிளாஸ்டிக் குழாய் தடுப்புகளை, நேற்று முன்தினம் இரவு போலீசார் அமைத்துள்ளனர். அதேபோல் எல்டாம்ஸ் சாலையும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை மேற்கொள்வதால், அண்ணா சாலையில் ஓரளவு நெரிசல் குறையும் என, போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில், 'ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் ஒருவழிப்பாதையாக வாகனங்கள் செல்வதே மிகுந்த சிரமமாக உள்ள நிலையில், தற்போது இருவழிப்பாதையாக மாற்றுவதால் விபத்து சம்பவங்கள் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது' என்றனர்.