ADDED : ஜூலை 09, 2025 12:21 AM
பேசின்பாலம், டிமலஸ் 'அம்மா' உணவகத்தில் பாத்திரங்கள் மாயமானது குறித்து, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூளை அருகே 77வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், டிமலஸ் சாலையில் 'அம்மா' உணவகம் இயங்கி வருகிறது. இதை திரு.வி.க.நகர் மண்டல மாநகராட்சி அதிகாரி மோகனசுந்தரம், 39, அலுவலராக இருந்து கவனித்து வருகிறார்.
உணவு தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை டெய்சி ராணி என்பவர் கவனிக்கிறார். அம்மா உணவகம் அருகே மழைநீர் வடிகால்வாய் பணி நடந்ததால், கடந்த மே மாதம் 25ம் தேதி முதல் அம்மா உணவகம் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை, அம்மா உணவகத்தை டெய்சிராணி திறந்து பார்த்தபோது, அனைத்து பொருட்களும் பத்திரமாக இருந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பார்த்தபோது, சமையல் 'காஸ்' சிலிண்டர் எட்டு; 20 கிலோ உணவு தயாரிக்கும் டபரா பாத்திரம் நான்கு; 10 கிலோ உணவு தயாரிக்கும் டபரா பாத்திரம் நான்கு; 200 இட்லி செய்யும் பாத்திரம் ஒன்று; கிரைண்டர் ஒன்று; ஈ கொல்லி இயந்திரம் ஒன்று; வாட்டர் ஹீட்டர் ஒன்று; எடை போடும் இயந்திரம் ஒன்று என, 23,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மாயமாகி இருந்தன. இது குறித்து மோகனசுந்தரம் பேசின்பாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.