/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமோனியா வாயு கசிவு போராட்டம் தேர்தல் விதிகளால் முடிவுக்கு வருகிறதா?
/
அமோனியா வாயு கசிவு போராட்டம் தேர்தல் விதிகளால் முடிவுக்கு வருகிறதா?
அமோனியா வாயு கசிவு போராட்டம் தேர்தல் விதிகளால் முடிவுக்கு வருகிறதா?
அமோனியா வாயு கசிவு போராட்டம் தேர்தல் விதிகளால் முடிவுக்கு வருகிறதா?
ADDED : மார் 17, 2024 01:24 AM

எண்ணுார்:எண்ணுார், பெரியகுப்பம் பகுதியில், 'கோரமண்டல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்நிறுவன வளாகத்தில் உள்ள அமோனியா தொட்டிக்கு, நடுக்கடலில் கப்பலில் இருந்து, அமோனியா இறக்குமதி செய்ய குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
டிச., 26ல், நள்ளிரவு 11:30 மணிக்கு, அந்த குழாயில் பராமரிப்பு - குளிர்வித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, மிக்ஜாம் புயலின்போது சேதமடைந்து, குழாயில் ஏற்பட்டிருந்த துளை வழியாக, அமோனியா வெளியேறியது.
காற்று வாக்கில், பெரியகுப்பம், சின்னகுப்பம், எர்ணாவூர் குப்பம் என, எண்ணுார் சுற்றுவட்டாரம் முழுதும் அமோனியா வாயு பரவியது.
இதனால், அப்பகுதி மக்கள் வாந்தி, தலைச்சுற்றல், ஒவ்வாமை, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
வாயு கசிவிற்கு காரணமான ஆலையை மூடக்கோரி, பிரதான வாயில் மற்றும் பெரியகுப்பம் வாயிலை முற்றுகையிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் போராடினர்.
தற்காலிகமாக ஆலையை மூட 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டதால், மற்ற பகுதிகளில் போராட்டம் விலக்கப்பட்டு, பெரியகுப்பம் வாயில் அருகே மட்டும், 33 நகரைச் சேர்ந்த எண்ணுார் மக்கள் பாதுகாப்புக் குழு சார்பில், தொடர் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 81 நாட்களாக, போராடி வருகின்றனர். நேற்று காலை, ஆலையை மூடக்கோரி, எண்ணுார் முழுதும் மனித சங்கிலி மற்றும் காலையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், போராடுபவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, 'தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதால், போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். ஆலை மூடி தான் இருக்கிறது. போராட்டம் தொடரும்பட்சத்தில், தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, காவல் துறை செயல்படும்' எனக் கூறினர்.
இந்நிலையில், எண்ணுார் மக்கள் பாதுகாப்புக் குழு சார்பில், போராட்டம் தொடர்வது குறித்து, நேற்று, பேச்சு நடத்தப்பட்டது. அதில், நீதிமன்றம், தேர்தல் கமிஷனை அணுகி, போராட்டத்தை தொடர வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வருவதால், நள்ளிரவு வரை முடிவு ஏதும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.

