/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பணியால் வீடுகள் சேதம் அண்ணா பல்கலை குழு ஆய்வு
/
மெட்ரோ பணியால் வீடுகள் சேதம் அண்ணா பல்கலை குழு ஆய்வு
மெட்ரோ பணியால் வீடுகள் சேதம் அண்ணா பல்கலை குழு ஆய்வு
மெட்ரோ பணியால் வீடுகள் சேதம் அண்ணா பல்கலை குழு ஆய்வு
ADDED : ஜூலை 07, 2025 03:35 AM
சென்னை:சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ வழித்தட பணி நடந்து வருகிறது.
அதற்காக, மெரினா, காமராஜர் சாலை, தி.நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
மெட்ரோ பணியின்போது, காமராஜர் சாலை, நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் சுவரில், விரிசல் அடைந்ததாக கூறப்பட்டது.
நொச்சிக்குப்பம் பகுதி எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள பார்த்திபன், பாலசந்திரன், காமராஜர் சாலையில் உள்ள ரம்யா கூல் பார் மற்றும் இவர்களுக்கு அருகில் உள்ள கடைகள், வீடுகள் உட்பட 25 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நொச்சிக்குப்பம் திட்ட பகுதியில், மெட்ரோ சுரங்கப்பணியால் பழுதடைந்த குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி., அல்லது அண்ணா பல்கலையைச் சேர்ந்த நிபுணர் குழுவை நியமிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து, கடந்த ஜூன் 6ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், அண்ணா பல்கலை நிபுணர் குழு சார்பில், ஆறு பேர் உடைய குழு, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள், ஒரே ஒரு வீடு மட்டும் பார்வையிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அப்பகுதி குடியிருப்புவாசி பாரதி கூறியதாவது:
மெட்ரோ பணியால், காமராஜர் சாலையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில், 25 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. முறையாக ஆய்வு செய்து, அதற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு வீட்டை மட்டும் பார்த்து விட்டு, ஆய்வு முடிந்தது என கூறும் போக்கு முறையல்ல.
பாதிப்புக்குள்ளான அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.