/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல குழுவில் 23 தீர்மானங்களுக்கு அனுமதி
/
மண்டல குழுவில் 23 தீர்மானங்களுக்கு அனுமதி
ADDED : மார் 07, 2024 12:51 AM
பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் காமராஜ் தலைமையில், நேற்று நடந்தது. அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
மாநகராட்சிக்கு சொந்தமான டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தின் பராமரிப்பு மோசமாக உள்ளது. பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மண்டபத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், சங்கம் மற்றும் ஏரிக்கரை தெருவில், ஆறு மாதங்களாக குடிநீர் வரவில்லை. புதிய குழாய் பொருத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரம் மாநகராட்சி முழுதும் அதிகரித்துள்ள தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து, 4.12 கோடி ரூபாய் செலவில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 17 கோடி ரூபாய் செலவில், 133 தார் சாலைகள், 23 சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி, ஐந்து மண்டலங்களிலும் நடந்து வருகின்றன. மாநில நிதிக்குழு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1 கோடி ரூபாய் செலவில், 9 தார் சாலைகள், 7 சிமென்ட் சாலைகள்; 15வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் 1.75 கோடி ரூபாய் செலவில், 17 தார் சாலைகள் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

