ADDED : ஆக 20, 2025 03:02 AM

அம்பத்துார், கட்டுமான பணிக்காக சென்னை வந்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரை அடுத்து, அம்பத்துாரில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், கட்டுமான பணிகளுக்காக தனியார் மேன்பவர் ஏஜன்சியின் ஏற்பாட்டில், நேபாளம் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை வந்தனர்.
அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர், அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பகுதியில், ரமேஷ் என்பவர் நடத்தி வரும் மேன்பவர் நிறுவனத்திடம் அவர்களை ஒப்படைத்துள்ளார். ஒருவருக்கு 2,000 ரூபாய் என, 8,000 ரூபாய் வாங்கி சென்றதாக தெரிகிறது. அங்கு ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர், வேறு ஒரு நிறுவனத்திடம் தங்களை ஒப்படைத்து சென்றதை அறிந்த அவர்கள், தங்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் அவர்கள், 'நாங்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள்' எனவும் கூறி, அவர்களை அனுப்ப மறுத்துள்ளனர்.
இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாருக்கு, நேற்று மாலை புகார் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின், அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தினருடன் அனுப்பி வைத்துள்ளனர்.