/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவாலயம் முற்றுகை; அண்ணா சாலையில் மறியல் போலீசாரை திணறடித்த துாய்மை பணியாளர்கள் கைது
/
அறிவாலயம் முற்றுகை; அண்ணா சாலையில் மறியல் போலீசாரை திணறடித்த துாய்மை பணியாளர்கள் கைது
அறிவாலயம் முற்றுகை; அண்ணா சாலையில் மறியல் போலீசாரை திணறடித்த துாய்மை பணியாளர்கள் கைது
அறிவாலயம் முற்றுகை; அண்ணா சாலையில் மறியல் போலீசாரை திணறடித்த துாய்மை பணியாளர்கள் கைது
UPDATED : டிச 31, 2025 06:13 AM
ADDED : டிச 31, 2025 05:22 AM

சென்னை: சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க கோரி, அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை என, அடுத்தடுத்து இடங்களில் போராட்டம் நடத்திய 1,013 துாய்மை பணியாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நிரந்தரம், மாநகராட்சியில் மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தை, நேற்று காலை முற்றுகையிட முயன்றனர்.
போலீசார் தடுத்ததால் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள ஸ்கீம் சாலை வழியாக திடீரென நுழைந்தனர்.
தவிர ஏராளமான பெண் பணியாளர்கள் அண்ணா சாலையின் நடுவே அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் முன் சக்கரத்தில், தன் தலையை வைத்து, பெண் துாய்மையாளர் படுத்துவிட்டார்.
மற்றொரு பெண் திடீரென மயக்கமடையவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல் மற்றொரு குழுவினர், மதியம் 2:00 மணிக்கு, மெரினா காமராஜர் சாலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும், அண்ணா சாலை ஓமாந்துாரார் அரசு மருத்துவமனையிலும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்செய்யவும் திணறினர்.
இரவு 10:30 மணி அளவில் ரிப்பன் மாளிகை அருகே துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். மொத்தம் 1,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெண் துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
இந்த வேலையை நம்பி தான் எங்களுடைய வாழ்க்கையே இருக்கிறது. இந்த வேலையும் எங்களுக்கு இல்லை என்றால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுவோம்.
ஐந்து மாதங்களாகப் போராடியும், யாரும் எங்கள் மீது துளியும் அக்கறை காட்டவில்லை.
தமிழக முதல்வரே ஏழை, எளிய துாய்மை பணியாளர்களின் பிரச்னையை பேசி தீர்க்க முன்வாருங்கள்
இவ்வாறு அவர்கள் கூறினர்.

