ADDED : டிச 31, 2025 05:21 AM

- நமது நிருபர் -: விநாயகரை போற்றும், 'வாரண முகவாய் துணை' என்ற, கோடீஸ்வர அய்யர் இயற்றிய துதியை ஆத்மார்த்தமாக பாடி, நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, பக்தியை உற்சாகமாக அரங்கிற்குள் வரவேற்றார் பிரபல கர்நாடக இசை கலைஞர் சவுமியா.
அடுத்து, தண்டபாணி தேசிகர் இயற்றிய, 'அருள வேண்டும் தாயே அங்கயற்கண்ணி' என்ற கிருதியை, லாவகமாக பாடலானார். அதில், 'கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்' என்ற சரணத்தை மெய்யுருக பாடினார். இதில் அவர் தொடுத்த ஸ்வரங்கள், கரவொலியாய் ஒலித்தன.
பாபநாசம் சிவன் இயற்றிய, 'குமரன் தாள் பணிந்தே துதி' கிருதியை, யதுகுல்ல காம்போதி ராகத்தில் அமைத்து பாடினார்.
தொடர்ந்து, 'சிவ லோக நாதனை கண்டு சேவித்திடுவோம் வாரீர்' என்ற, கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய கிருதியை பாடினார். இதன் தொடர்ச்சியாக ஸ்வரம் மற்றும் வயலின் சிறப்பாக இசைக்கப்பட்டது. பின், மிருதங்க கலைஞர் பிரவீன்குமார் மற்றும் வயலின் கலைஞர் அவனீஸ்வரம் வினுஆகியோரின் இசை பக்கபலமாய் இருந்தது.
இருவரும் இசையில் மூழ்கி, திறம்பட வாசித்தனர்.
அடுத்து பாரதியார் இயற்றிய, 'சொல்ல வல்லாயோ கிளியே' என்ற கிளி விடு துாது பாடலை பாடி, அரங்கின் உணர்ச்சி பெருக்கை பெருக்கினார்.
காவடி சிந்து பாடலை இன்ப கானமாக பாடி, மங்கலமாக, 'வாழிய செந்தமிழ் வாழிய' என்ற பாடலை பாடி, இனிதாக கச்சேரியை முடித்தார்.

