/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவேற்காடில் திறக்காத கழிப்பறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க ஏற்பாடு
/
திருவேற்காடில் திறக்காத கழிப்பறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க ஏற்பாடு
திருவேற்காடில் திறக்காத கழிப்பறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க ஏற்பாடு
திருவேற்காடில் திறக்காத கழிப்பறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க ஏற்பாடு
ADDED : மே 30, 2025 12:29 AM

திருவேற்காடு :திருவேற்காடு, வீரராகவபுரம், 13வது வார்டு காடுவெட்டியில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
அதன் அருகே, துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ், 36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது கழிப்பறை அருகில், காடுவெட்டி துலுக்கானத்தம்மன் ஊர் கோவிலில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இரு மாதங்களாக நடந்து வரும் இப்பணியில் வடமாநிலத்தவர்கள் ஆறு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், மேற்கூறிய கழிப்பறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம், கழிப்பறையை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டை, அப்பகுதி கவுன்சிலர் காஞ்சனா மறுத்துள்ளார். ஆனால், கழிப்பறை உள்ளே டேபிள் பேன், பிளாஸ்டிக் பாக்கெட், குடிநீர் கேன் உள்ளிட்டவை வைக்கப்பட்டு உள்ளன. மேலும், கயிறு கட்டி, துணிகள் உலர்த்துவதையும் காண முடிகிறது. அவை யாருக்கும் தெரியாமல் இருக்க, பிளாஸ்டிக் திரை போட்டு மறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கழிப்பறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இது குறித்து, தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர் காஞ்சனா கூறியதாவது:
சில நாட்களுக்கு பெய்த மழையின் போது, வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அவர்கள், தற்காலிகமாக கழிப்பறையில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள், வேறு இடத்தில் தங்கியுள்ளனர். நகராட்சி அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். கழிப்பறை விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.