/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை வாலிபர் கொலை வழக்கு 11 ஆண்டுக்குபின் அசாம் நபர் கைது
/
சைதை வாலிபர் கொலை வழக்கு 11 ஆண்டுக்குபின் அசாம் நபர் கைது
சைதை வாலிபர் கொலை வழக்கு 11 ஆண்டுக்குபின் அசாம் நபர் கைது
சைதை வாலிபர் கொலை வழக்கு 11 ஆண்டுக்குபின் அசாம் நபர் கைது
ADDED : ஆக 27, 2025 12:31 AM

சென்னை,சைதாப்பேட்டை வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த அசாம் வாலிபர் 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்.
சைதாப்பேட்டை, கோதாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூங்கன்னி. இவர், 2014 ஆக., 11ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'என் மகன் மாணிக்கம், 25, தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். உடல் வலி அதிகமாக இருப்பதாக கூறியதால், வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னும் உடலில் வலி தொடர்ந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு சிகிச்சை பலனின்றி, என் மகன் உயிரிழந்துவிட்டார். என் மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது' என, தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, போலீசார், டாக்டர்கள் உதவியுடன் மாணிக்கத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தனர். அப்போது, அவரின் உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததும், யாரோ அடித்து சித்ரவதை செய்து இருப்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், மாணிக்கம் கிண்டி கத்திபாரா மேம்பாலம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த இடத்தில் பணிபுரிந்த மூன்று பேர், இரும்பு பொருட்களை திருடிவிட்டதாக மாணிக்கத்தை கட்டி வைத்து, அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தரூபன், 36, நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஒபேத், 32, ஆகியோரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வஜித், 39, தலைமறைவானார்.
கடந்த 11 ஆண்டுகள் தேடப்பட்டு வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

