ADDED : டிச 13, 2024 12:29 AM
அடையாறு: அடையாறு, காந்தி நகர் முதலாவது பிரதான சாலையில் நின்ற ஒரு வாலிபரை, நேற்று முன்தினம் ரோந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், சிறிய பிளாஸ்டிக் குப்பிகளில், 6 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் இருந்தது.
விசாரணையில், அசாம் மாநிலம், நாகோன் பகுதியை சேர்ந்த அன்ருல் இஸ்லாம், 32, என தெரிந்தது. அவரை அடையாறு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மதுரவாயல் மேம்பாலம் அருகே நேற்று காலை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 26, லோகேஷ், 22 ஆகிய இருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட, 1.50 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் இருந்தது.
அவற்றை வாங்க ஐந்து பேர் வர உள்ளதும் தெரியவந்தது. போதை மாத்திரை வாங்க வந்தவர்கள் உட்பட ஏழு பேரையும் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

