/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.17.97 கோடி சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
ரூ.17.97 கோடி சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 10, 2025 12:32 AM

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட 17.97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட 28 காவல் நிலையங்கள், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு புகாரில், கடந்த ஆறு மாதங்களாக திருடு போன சொத்துக்கள் மீட்கப்பட்டன.
அவை, திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், 87 சவரன் தங்க நகை, 3.96 லட்சம் ரூபாய், 317 மொபைல் போன்கள், 6,050 ஜோடி காலணி, நான்கு இருசக்கர வாகனங்கள், 90 'ஏசி' என, 1.49 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல், காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில், கன்டெய்னரில் இருந்து திருடப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 922 கிலோ எடை உடைய 30 வெள்ளி பார் கட்டிகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில், 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி, நில மோசடி, வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட 16 வழக்குகளில், குற்றவாளிகளிடம் இருந்து 6.89 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
மேலும், பங்கு சந்தை, பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான 'ஆன்லைன்' மோசடி புகாரில் பெறப்பட்ட 32 வழக்குகளில், 57.43 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
மேற்கூறிய குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட 17.97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.

