ADDED : ஏப் 08, 2025 01:29 AM
சென்னை, தலைமைச் செயலகம் செல்வதற்காக முதல்வரின் கான்வாய் வாகனம், டி.டி.கே., சாலை வழியாக சென்றது. அப்போது, டி.டி.கே., சாலை முதலாவது குறுக்கு தெரு அருகே, 19 பேர் குவிந்தனர். முதல்வரின் வாகனததை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 1,299 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, 20 வயதுக்கு மேற்பட்ட, 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, தமிழக அரசு எஸ்.ஐ. ,தேர்வை நடத்தவில்லை. தேர்வுக்கு தயாரான எங்களில் சிலருக்கு வயது அதிகரித்து விட்டது. எனவே, வயது வரம்பில் தளர்வு வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தினர்.
இருப்பினும், 19 பேரையும் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.