/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
/
மணலியில் தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
மணலியில் தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
மணலியில் தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
ADDED : ஆக 28, 2025 12:32 AM
மணலி, ஆக. 28-
மணலியில் தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம், பீதியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மணலி, பெரியசேக்காடு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 54; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், மாதவரம் மண்டலம், 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சந்திரனின் தம்பி.
இவர், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காக, நேற்று காலை பூஜை பொருட்கள் வாங்க, மணலி மார்க்கெட் சந்திப்பிற்கு, டூ - வீலரில் வந்தார். கடையில், பூ, பழம் வாங்கிக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த மர்ம நபர், அவரை கத்தியால் வெட்டியுள்ளார்.
சுதாரித்த செல்வராஜ், கத்தியை பிடித்து தடுத்துள்ளார். பின், பயத்தில் சாலையில் ஓடி, அருகேயுள்ள அம்பேத்கர் தெரு, வீடு ஒன்றில் புகுந்தார். அவரை பின்தொடர்ந்து மர்ம நபர், அங்கே சென்று அவரை சரமாரியாக வெட்டி தப்பியோடினார்.
மணலி போலீசார், தலை, தோள்பட்டையில் வெட்டுக்காயம் மற்றும் விரல் துண்டித்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வராஜை மீட்டு, மாதவரம் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி, சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர்களான அசாருதீன், 30, கணேஷ், 25, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மணலி சந்தை பகுதியில், தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம், அம்பத்துாரில் உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்பாபு என்பவர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செல்வராஜ், இரு மாதங்களுக்கு முன் தான், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.