/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி மாநகராட்சியால் தொடர்ந்து ஏமாற்றம் சாலையை சீரமைத்த ஆயுதப்படை போலீசார்
/
ஆவடி மாநகராட்சியால் தொடர்ந்து ஏமாற்றம் சாலையை சீரமைத்த ஆயுதப்படை போலீசார்
ஆவடி மாநகராட்சியால் தொடர்ந்து ஏமாற்றம் சாலையை சீரமைத்த ஆயுதப்படை போலீசார்
ஆவடி மாநகராட்சியால் தொடர்ந்து ஏமாற்றம் சாலையை சீரமைத்த ஆயுதப்படை போலீசார்
ADDED : டிச 07, 2025 05:25 AM

ஆவடி: திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில், புதிதாக அமைத்து இரண்டு ஆண்டுகளில் பல்லிளித்த சாலையை மாநகராட்சி கண்டுகொள்ளாததால், ஆயுதப்படை போலீசார் களத்தில் இறங்கி சீரமைத்தனர்.
திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 1,968 அடி நீள சாலை ஆவடி மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள 2,000 அடி சாலை, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த சாலையில் தினமும் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில், பல ஆண்டுகளாக மாநகராட்சி சீரமைக்காததால், குண்டும் குழியுமாக மாறியது.
அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்ததை அடுத்து, 2023 மார்ச் மாதம், 'பேட்ச் ஒர்க்' சாலை ஒட்டுப்பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டது.
சீரமைக்கப்பட்ட சிறிது நாட்களில், சாலை மீண்டும் சேதமடைந்ததால், 2023 இறுதியில், புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. எனினும், இரு ஆண்டுகளிலே, போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, அப்பகுதி காவலர் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை போலீசார், அக்., மாதம், குண்டும் குழியுமான சாலையை, தங்கள் சொந்த செலவில் தற்காலிகமாக சீரமைத்தனர்.
இந்நிலையில், பட்டாபிராம், அண்ணா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிவேல், 50, என்பவர் 'டி.வி.எஸ்., ஜிஸ்ட்' இருசக்கர வாகனத்தில், நவ., 1ம் தேதி, இச்சாலையில் பயணித்தார்.
அப்போது, சாலை பள்ளத்தில் தவறி விழுததில் இடது கை உடைந்தது. தற்போது வரை அவரது கை சரியாகாமல், அவதியடைந்து வருகிறார். இதுபோல், வாகன ஓட்டிகள் அடிபடுவது தொடர்ந்தும், மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சில நாட்களுக்கு முன், 'டிட்வா' புயலில் பெய்த கனமழையால், சாலை மேலும் மோசமடைந்தது. இதனால், விபத்தில் சிக்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆவடி மாநகராட்சியின் அலட்சிய செயலால் அதிருப்தியடைந்த 13வது பட்டாலியன் போலீஸ் அணியின் தலைவர் அய்யாசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை பிரிவு ஆயுதப்படை போலீசார் 20 பேர், சாலையை சீரமைக்க, நேற்று களத்தில் இறங்கினர்.
கான்கிரீட் கலவை கொட்டி, நேற்று காலை சாலையை சீரமைத்தனர். இதற்காக அவர்கள் 10,000 ரூபாய், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்தனர். ஆயுதப்படை போலீசாரின் இந்த செயல், வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்றது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சத்தியமூர்த்தி நகர் சாலையில் ஒட்டுப்பணி செய்ய, 'டெண்டர்' விடப்பட்டு விரைவில் சாலை சீரமைக்கப்படும்' என்றனர்.

