/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகை வீட்டில் அங்கன்வாடி ஆவடி கரிமேடில் அவலம்
/
வாடகை வீட்டில் அங்கன்வாடி ஆவடி கரிமேடில் அவலம்
ADDED : நவ 15, 2024 12:56 AM

ஆவடி, ஆவடி அடுத்த பாலவேடு, கரிமேடு, காமராஜர் நகர் அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
கட்டடத்தை சுற்றி புதர் மண்டி காட்சி அளிப்பதால், ஜன்னல் வழியாக பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே புகுந்து விடுகின்றன. அதனால், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப, பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, அடிக்கடி பெய்து வரும் மழையில், அங்கன்வாடி கட்டடம் மேலும் வலுவிழந்து, சுவரில் நீர்பூத்து காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக, எதிரில் உள்ள வாடகை வீட்டில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இதனால், பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி, புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, அம்பத்துார் வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டபோது, 'சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி மையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.