ADDED : நவ 17, 2026 03:51 PM
சென்னை: கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து, 41 நாட்கள் விரதத்தை இன்று (நவ.,17) தொடங்கினர்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை போட்டு, விரத்தைத் தொடங்குவது வழக்கம். ஒரு மண்டலமான, 41 நாட்களுக்கு விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் சென்று, அய்யப்பனை தரிசிப்பர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, சென்னை, புறநகரில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும், விநாயகர் கோவில்களிலும் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து, விரதத்தைத் தொடங்கினர்.
சென்னையில் மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம், நங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.
கார்த்திக்கை மாதத்தை முன்னிட்டு, அனைத்து அய்யப்பன் கோவில்களிலும் தினசரி பூஜை, விளக்கு பூஜை, லட்சார்ச்சனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
