தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பழவந்தாங்கலில் மழைநீர் வடிகால் பணிகளில்... இழுத்தடிப்பு! ஓராண்டாக அனுமதி தராத ரயில்வே நிர்வாகம்

பழவந்தாங்கலில் மழைநீர் வடிகால் பணிகளில்... இழுத்தடிப்பு! ஓராண்டாக அனுமதி தராத ரயில்வே நிர்வாகம்

பழவந்தாங்கலில் மழைநீர் வடிகால் பணிகளில்... இழுத்தடிப்பு! ஓராண்டாக அனுமதி தராத ரயில்வே நிர்வாகம்


UPDATED : நவ 17, 2026 04:00 PM

ADDED : நவ 17, 2026 03:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 04:00 PM ADDED : நவ 17, 2026 03:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் - -

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தை கடக்கும் பகுதியில், 100 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள மாநகராட்சி, இரண்டு கோடி ரூபாய் செலுத்தியும், தெற்கு ரயில்வே ஓராண்டாக அனுமதி மறுத்து வருகிறது. இதனால், பருவமழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி, விமான நிலையம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகள், வெள்ளத்தில் மதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தின் ஒரு பகுதி நீர், மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாறு ஆற்றில் கலக்கும்.

அதேபோல், விமான நிலையம், விமான நிலைய ஊழியர் குடியிருப்பு, மீனம்பாக்கம், கண்ணன் காலனி, பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் மழைநீர், பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் உள்ள நீரேற்று நிலையத்தில் சேகரமாகும்.

அங்கிருந்து, 'பம்பிங்' செய்யப்பட்டு, கண்ணன் காலனியில் உள்ள சிறு வடிகால் வழியாக, நங்கநல்லுார், ஆதம்பாக்கம் ஏரி, வீராங்கல் ஓடை, சதுப்பு நிலம், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலை சென்றடையும்.

இதில், கண்ணன் காலனி பகுதி வடிகாலில், தண்ணீர் உள்வாங்கு திறன் குறைவாக உள்ளதால் பலத்த மழை பெய்தால், நீரோட்டம் தடைபட்டு பின்னோக்கி ஏறுகிறது.

அதனால், விமான நிலையம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில், வெள்ளம் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பழவந்தாங்கல் நீரேற்று நிலையத்தில் இருந்து, ரயில் நிலையத்தை கடக்க, பெரிய அளவிலான மழைநீர் வடிகால் அமைக்க முடிவானது.

ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் இடத்தில், கால்வாய் அமைக்க தேவையான, 'ப்ரீகாஸ்ட்' எனும் முன்தயாரிப்பு கான்கிரீட் கட்டுமானங்கள் தயாரிக்கப்பட்டன.

இப்பணிக்காக ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில், இரண்டு கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.

ரயில்வே தண்டவாள பகுதியில், கால்வாய் அமைக்கும் பணிக்கு, எட்டு மணி நேரம் மட்டுமே தேவைப்படும் எனக்கூறி, தண்டவாளத்தை ஒட்டி வடிகால் அமைக்க அனுமதி கோரி, மாநகராட்சி விண்ணப்பித்தது.

ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், தெற்கு ரயில்வே அனுமதி வழங்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

ரயில்வேயின் தாமதத்தால், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும்பட்சத்தில் விமான நிலையம், மீனம்பாக்கம், விமான நிலைய குடியிருப்புகள், கண்ணன் காலனி உள்ளிட்ட பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் உள்ளது.

மேலும், பல கோடி ரூபாயில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள, கான்கிரீட் கட்டமைப்புகளும் வீணாகி வருகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகள், பருவமழைக்கு முன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே அதிகாரிகள்

சொல்வது என்ன?

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில், மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்வதில், ரயில்வே துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சிக்கல் உள்ளன.

இதற்காக, தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஒப்புதல் பெற வேண்டும். ரயில் தண்டவாளத்தையே துண்டிக்க வேண்டிய நிலையும் இருப்பதால், ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடமும் ஒப்புதல் பெற வேண்டும்.

மேலும், தென்மாவட்டங்கள் மற்றும் புறநகர் ரயில்கள் இயக்கும் இந்த தடம், நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது. ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடாது.

எனவே, அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்தே பிறகே, இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். பருவ மழைக்காலம் முடிந்த பின், தெற்கு ரயில்வே உரிய அனுமதி அளிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.100 கோடி திட்டம்


சென்னை மாநகராட்சியுடன் ஆலந்துார் நகராட்சி இணைக்கப்பட்டு, மண்டலமாக மாற்றப்பட்டதும், மழைநீர் வடிகால் மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ள, இரு ஆண்டுகளுக்கு முன், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை பகுதியில், 40 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது.
அதேபோல், நங்கநல்லுார் பகுதியில், திரிசூலம் மலை அடிவாரத்தில் இருந்து, 60 அடி சாலை, நேருநகர், பாடர்தோட்டம், நேருகாலனி, சுதந்திரதின பூங்கா, நங்கநல்லுார், நான்காவது சாலை வழியாக, ஒரு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இதுதவிர, எம்.ஜி.ஆர்., சாலை, 100 அடி சாலை, லட்சுமிநகர் வழியாக ஒரு கால்வாய் அமைக்கப்பட்டது.
பழவந்தாங்கல் நோபல் தெரு, பழவந்தாங்கல், நான்கு, முதலாவது பிரதான சாலை வழியாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் என, மூன்று பகுதிகளில், மொத்தம் 60 கோடி ரூபாயில் திட்டப்பணிகள் முடிந்தன.
இவை மூன்றும், அப்பகுதியில் வடிகால்வாயான வீராங்கல் ஓடையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து பணிகளும் முடிந்தாலும், பழவந்தாங்கல் பகுதியில், 100 மீட்டர் பணி முடக்கத்தால், ஒட்டுமொத்த திட்டமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us