/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை
/
புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்க தடை
ADDED : டிச 31, 2025 04:03 AM
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சென்னை முழுதும் பட்டாசு வெடிக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில், ஆளில்லா விமானம் வாயிலாக, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர்.
பொதுமக்கள் கடலில் இறங்க மற்றும் குளிக்க, தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்க, 30 இடங்களில் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவிர, 425 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் இருப்பர். சென்னை முழுதும், புத்தாண்டு அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
அரசின் அனுமதி பெற்ற மனமகிழ் மன்றங்கள், ஹோட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களில், குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

