/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி 'பாஸ்போர்டில்' வந்த வங்தேச இளம்பெண் கைது
/
போலி 'பாஸ்போர்டில்' வந்த வங்தேச இளம்பெண் கைது
ADDED : ஜன 01, 2024 01:43 AM
சென்னை:வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, போலி பாஸ்போர்ட்டில் விமானத்தில் சென்னை வந்த இளம்பெண்ணை, குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது.
அதில் வந்த பயணியரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது, ஜல்குரி வில்லாகி, 25, என்ற இளம்பெண் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த குடியுரிமை அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை கணினியில் ஆய்வு செய்த போது, அது போலி என தெரிந்தது.
இதையடுத்து தீவிரமாக விசாரித்ததில், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த, 25 வயதான ஷார்மின் அக்தர் என தெரிந்தது.
இவர் இந்தியாவிற்குள் ஊடுருவி, மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்று, அங்குள்ள ஏஜன்டுகளிடம் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை, ஜல்குரி வில்லாகி என்ற பெயரில் போலியாக பெற்று, தன் தாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று, சென்னை திரும்பியது தெரிந்தது. இதையடுத்து, அவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து, மத்திய உளவுப் பிரிவு, கியூபிராஞ்ச், இன்டெலிஜென்ட் அதிகாரிகளும், இவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா, இந்தியாவிற்கு வந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தனர். பின் அவரை நேற்று, சென்னையில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.