/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் பயனாளிகள் தவிப்பு
/
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் பயனாளிகள் தவிப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் பயனாளிகள் தவிப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் பயனாளிகள் தவிப்பு
ADDED : செப் 01, 2025 12:33 AM
கே.கே., நகர்:மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாக பணிகளில் சிக்கல் ஏற்படுகிறது. தவிர, பயனாளிகளுக்கான சேவையும் பாதிக்கப்படுகிறது.
சென்னை தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், விருகம்பாக்கம், சாய் நகர், காளியம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வருகிறது. அதேபோல், கே.கே., நகர் பாரதிதாசன் காலனியில், சென்னை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.
சென்னையில், அதிக வாகனங்கள் பதிவு செய்யப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களாக, இவை இரண்டும் உள்ளன.
இரு அலுவலகங்களிலும், ஆர்.டி.ஓ., பணியிடம் காலியாக இருந்ததால் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து, நம் நாளிதழில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரு அலுவலகங்களில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களில், பற்றாக்குறை நிலவி வருகிறது.
இரு அலுவலகங்களிலும் நான்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.
கே.கே., நகரில் உள்ள சென்னை மேற்கு வட்டார அலுவலகத்திற்கு, குன்றத்துார் வட்டார அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர், கூடுதல் பணியாக வந்து செல்கிறார்.
விருகம்பாக்கத்தில் உள்ள சென்னை தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, தெற்கு சரக வட்டார போக்குவரத்து செயலாக்க பிரிவு ஆய்வாளர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவரே, விண்ணப்பங்களில் கையொப்பமிடுவது துவங்கி, வாகன ஒப்புதல், தகுதிச்சான்றிதழ், புதிய பதிவெண் வழங்குவது வரை பணிகளை மேற்கொள்வதால் பல்வேறு சிரமம் ஏற்படுகிறது.
இதனால், பயனாளிகளுக்கான சேவை விரைவாக கிடைக்காமல் தாமதமாகிறது. இவர்கள், விடுப்பில் சென்றால், மாற்று ஆள் இல்லாமல், மொத்த பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, இந்த இரு வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், போதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.