/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை - தேனாம்பேட்டை இடையே... 3.2 கி.மீ., இரும்பு பாலம் 70 இடங்களில் மண் பரிசோதனை
/
சைதை - தேனாம்பேட்டை இடையே... 3.2 கி.மீ., இரும்பு பாலம் 70 இடங்களில் மண் பரிசோதனை
சைதை - தேனாம்பேட்டை இடையே... 3.2 கி.மீ., இரும்பு பாலம் 70 இடங்களில் மண் பரிசோதனை
சைதை - தேனாம்பேட்டை இடையே... 3.2 கி.மீ., இரும்பு பாலம் 70 இடங்களில் மண் பரிசோதனை
ADDED : மார் 08, 2024 11:25 PM

அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை இடையே 3.2 கி.மீ.,க்கு இரும்பு பாலம் அமைக்க, 70 இடங்களில் மண் பரிசோதனை நடக்கிறது. 'இரண்டு ஆண்டுக்குள் பாலப்பணி முடிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் நுழைவாயிலான அண்ணா சாலை, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கிண்டியில் இருந்து பாரிமுனை வரை, இச்சாலை 100 முதல் 180 அடி வரை அகலத்தில் 15 கி.மீ., துாரம் அமைந்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவை அறிமுகமான பிறகும், அண்ணா சாலையில் வாகன நெரிசல் குறையவில்லை. 2021ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இச்சாலையில் சைதாப்பேட்டை தேனாம்பேட்டை இடையே, ஒரு நாளுக்கு 2.87 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.
தற்போது, மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன.
இதில், 65 சதவீத வாகனங்கள், தேனாம்பேட்டையைக் கடந்து, ஆயிரம் விளக்கு பகுதியை நோக்கி நேராக செல்பவை. காலை, மாலையில் 'பீக் ஹவர்' வேளையில் நெரிசல் கடுமையாக அதிகரிப்பதால், 15 முதல் 20 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிடுகிறது.
கடந்த, 2010ல் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு திட்டமிட்ட போது, எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருதி மேம்பாலம் அமைக்கும் திட்டமும் இருந்தது. இதை நெடுஞ்சாலைத் துறை முன்வைத்ததை அடுத்து, அதற்கு ஏற்ப மெட்ரோ சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், 'சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 3.2 கி.மீ., மேம்பாலம் அமைக்கப்படும்' என, 2022- - 23ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜன., 19ல், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கினார்.
வழக்கமான ஒப்பந்த முறையில், சம்பந்தப்பட்ட துறை வழங்கும் வரைபடத்தின் அடிப்படையில், கட்டுமானத்திற்காக ஒப்பந்தம் விடப்படும். ஆனால், இரும்பு மேம்பாலமாக அமைக்க திட்டமிட்டதை அடுத்து, பொறியியல், தொழில்நுட்பம், கொள்முதல் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றுடன் சேர்த்து, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஜெ.குமார் என்ற கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொண்டுள்ளது. தற்போது, சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை, 70 இடங்களில் மண் பரிசோதனை நடக்கிறது.
பரிசோதனையில் சாலை மட்டத்தில் இருந்து, 20 அடியில் களிமண், 20 முதல் 50 அடி வரை பாறை மண் மற்றும் கெட்டியான களிமண், 50 அடிக்கு மேல் பாறையாக இருப்பது தெரியவந்துள்ளது. மண்ணின் தன்மைக்கு ஏற்ப, அடித்தளம் அமைத்து, 'பில்லர்' அமைக்கப்படும். மண் பரிசோதனை, 40 நாட்கள் நடக்கும்.
வழக்கமாக மேம்பால துாண்கள், அடித்தளம் அமைத்து, கம்பி கட்டி கான்கிரீட் கலவையால் கட்டமைக்கப்படும்.
அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பணியை விரைவாக முடிக்க, இரும்பு துாண்கள் அமைத்து மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மொத்த பணியையும், இரண்டு ஆண்டுக்குள் முடிக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அண்ணா சாலையில் விரிவாக்கம் செய்ய முடியாததால், நெரிசலைக் குறைக்க மேம்பாலம் தான் தீர்வு.
மெட்ரோ பாதைக்கு மேல், புதிய தொழில்நுட்பத்துடன் கட்டுமான பணி நடப்பதால், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம், ஐ.ஐ.டி., மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்ந்து, மேம்பாலத்திற்கான வடிவமைப்பு செய்துள்ளனர்.
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்வதால், பாலத்திற்கான அடித்தளம் அமைக்க, ஆழமான பள்ளம், நீண்ட துளைகள் போட முடியாது.
இதனால், புதிய தொழில்நுட்பம் வாயிலாக மண்ணில் அழுத்தம் கொடுத்து கடினமாக்கப்படும். அதன் மீது கான்கிரீட் கலவை கொட்டி, இரும்பு துாண்கள் கட்டமைக்கப்படும்.
மண் பரிசோதனை முடிந்து, துாண்கள் அமைக்கப்படும் 11 மாதங்கள் வரை, தரை பலப்படுத்தப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்தில், பணி முடியும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இச்சாலையில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்ய வேண்டி வரும். அதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, 40 நிமிடத்தில் செல்ல வேண்டிய துாரத்தை, 5 முதல் 10 நிமிடத்தில் கடக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில், 2019ல் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
சென்னையில் தி.நகர் பகுதிக்கு அடுத்து, அண்ணா சாலையில் இரும்பு பாலம் அமைய உள்ளது. அதுவும், இந்தியாவில் முதல் முறையாக, மெட்ரோ ரயில் பாதையின் மேல் அமையும் இரும்பு மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சைதை - தேனாம்பேட்டை இடையே 3.2 கி.மீ., இரும்பு பாலம் அமைகிறது
20 அடி உயரத்தில் நான்கு வழி சாலையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது
7 சிக்னல்களில் நிற்க தேவையில்லை; பயண நேரம் 5-10 நிமிடங்களாக குறையும்
621 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்படும்
பாலம் கட்டுமானத்தின் போது போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது
- -நமது நிருபர்- -