/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெற்கே பிறந்து வடக்கே சென்ற பக்தி: கவர்னர் ரவி
/
தெற்கே பிறந்து வடக்கே சென்ற பக்தி: கவர்னர் ரவி
ADDED : நவ 13, 2024 02:41 AM

சென்னை:''தென்னிந்தியாவில் பிறந்த பக்தி, வட இந்தியாவுக்குச் சென்றது,'' என, கவர்னர் ரவி கூறினார்.
ஹிந்தி பிரசார சபாவில், 'பாரதம்: இலக்கியம் மற்றும் ஊடகம்' பற்றிய மூன்று நாட்கள் மாநாட்டின் துவக்க விழா, தி.நகரில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், ராஜலக் ஷ்மி எழுதிய 'உத்கிரிஷ்ட் தமிழ் சாகித்ய ஓர் சன்ஸ்கிருதி' மற்றும் கின்ஷுக் பதாக் எழுதிய 'மீடியா: நாயே ஆயாம்' மற்றும் கம்லேஷ் பட் எழுதிய 'சயநித் கஹநியன்' ஆகிய புத்தகங்களை கவர்னர் ரவி வெளியிட்டார். நுால்களை ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின், கவர்னர் ரவி பேசியதாவது:
'செப்புமொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள்' என, பாரதி கூறினார். நாம் 18 மொழிகள் பேசினாலும், நம் இதயத் துடிப்பு ஒன்றுதான்.
'பாரதம்' என்பது இலக்கியத்தில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'பாரதம்' இருந்தது. 'இந்தியா' என்பது சுதந்திரத்திற்கு பின் வந்தது.
அரசியல், அரசு என்பதுபுவியியல், மக்கள் தொகை, சட்டம், ஆட்சி மற்றும் இறையாண்மை ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதம் என்பது, ரிஷிகள் மற்றும் துறவிகளால் கட்டமைக்கப்பட்டது; எந்த ஒரு தனி மன்னராலும் அல்ல.
மனித குலத்தின் நன்மைக்காக உலகம் முழுதும் ஞானத்தைப் பரப்பும் பொறுப்பு பாரதத்திற்கு உண்டு.
இந்த மண்ணில் பிறந்த பக்தி, தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்குச் சென்றது.ஆதி சங்கராச்சாரியர், கம்பர், ராமானுஜர், துளசிதாஸர் மற்றும் பல மகான்களை இந்த மண் உருவாக்கியுள்ளது.
பாரதத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட பிரதமர் மோடி, மக்களை ஒரே குடும்பமாகக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த தொலைநோக்கு பார்வை, வளர்ச்சி மற்றும் வலிமையான பாரதத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
ஊடகங்கள், தவறாகபயன்படுத்தப்படக் கூடாது. புதிய பாரதத்தைக் கட்டியெழுப்புவதில், அதன் நேர்மையான பங்களிப்பைப் பாராட்டி, சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஒற்றுமை உணர்வை புரிந்துகொள்ள நாட்டு மொழிகளுக்கிடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும். நாட்டு மொழிகளுள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் தொன்மையான மொழி.
ஹிந்தி மொழியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம், அதே சமயத்தில் அனைத்து பிராந்திய மொழிகளையும் முன்னெடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., சின்ஹா, உ.பி., ஹிந்தி சன்ஸ்தான் இயக்குநர் ரவீந்திர பிரதாப் சிங், லக்னோ பல்கலையின் துணை வேந்தர் அலோக் ராய், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பரத் நாகர், சாகித்ய அகாடமியின் துணைத் தலைவர் குமுத் ஷர்மா, காந்தி ஸ்மராக் தலைவர் உதய் பி.கிருஷ்ணா, ஹிந்தி பிரசார் சபாவின் துணை வேந்தர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

