/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி 15 ஆண்டாக நடப்பதால்...ஆத்திரம்! பிரச்னைக்கு தீர்வுகாணாததால் திடீர் போராட்டம்
/
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி 15 ஆண்டாக நடப்பதால்...ஆத்திரம்! பிரச்னைக்கு தீர்வுகாணாததால் திடீர் போராட்டம்
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி 15 ஆண்டாக நடப்பதால்...ஆத்திரம்! பிரச்னைக்கு தீர்வுகாணாததால் திடீர் போராட்டம்
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி 15 ஆண்டாக நடப்பதால்...ஆத்திரம்! பிரச்னைக்கு தீர்வுகாணாததால் திடீர் போராட்டம்
ADDED : பிப் 04, 2025 11:42 PM

வண்ணாரப்பேட்டை : போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணியை துவக்கி, 15 ஆண்டுகளாக முடிக்காததால், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள், வண்ணாரப்பேட்டை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 40 ஆண்டுகளாக நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அவர்கள் கோஷம் எழுப்பினர்.
வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இப்பகுதியைச் சுற்றி 6,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
சென்ட்ரலில் இருந்து டில்லி வரை செல்லும் 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள், கொருக்குபேட்டை ரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.
கடும் அவதி
இதற்காக, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால், 'பீக் ஹவர்ஸ்'களில் மாணவர்களும், பணிகளுக்கு செல்வோரும், இந்த ரயில்வே கேட் பகுதியை கடக்க முடியாமல், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அவசர மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸ் வந்து செல்வதில்கூட தாமதம் ஏற்படுகிறது. இதனால், குறித்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாததால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமை மாற, 40 ஆண்டுகளாக அப்பகுதிவாசிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், போஜராஜன் நகரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு காண சுரங்கப்பாதை அமைப்படும் என, 2010ல், தி.மு.க., ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. மாநகராட்சியால் டெண்டர் விட்டு பணி துவங்கப்பட்ட நிலையில், திடீரென கிடப்பில் போடப்பட்டது.
பின், 2016ல், மாநகராட்சியும், தெற்கு ரயில்வேயும், 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுரங்கப்பாதை பணியை மீண்டும் துவங்கின; அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது.
மீண்டும், இரண்டு ஆண்டுகள் கடந்து, 2018ல் பணி துவங்கியது; ஆமை வேகத்தில் நடந்த பணி, கொரோனா தொற்று பரவல் காலக்கட்டத்தில் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
அலட்சியம்
இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் சுரங்கப்பாதையுடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாய் மதிப்பில், 2022 அக்டோபரில் புதிதாக பணி துவங்கப்பட்டது.
ரயில்வே சுரங்கப்பாதை அமையும் இடத்தின் அடிப்பகுதியில், 'இந்தியன் ஆயில்' நிறுவனத்தின் எண்ணெய் குழாய், 5 கி.மீ., செல்கிறது. அவற்றை மாற்று பாதையில் அமைக்கும் பணிகள், 2024 ஏப்ரல் முடிந்தன.
தொடர்ந்து, மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன. அதிகாரிகளின் அலட்சியத்தால், இப்பணிகள் மிகவும் மந்தமாக நடக்கின்றன.
ஒரே ஒரு சுரங்கப்பாதை பணி பல ஆண்டுகளாக நடந்து வருவதால் ஆத்திரமடைந்த இப்பகுதிவாசிகள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று, வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். மாதந்தோறும் ஐந்து பேர் உயிரிழப்புகள் நடப்பதாக கூறி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி, விரைவில் பணிகளை மேற்கொள்வாக உறுதியளித்ததை அடுத்து, பகுதிவாசிகள் கலைந்தனர். இப்போராட்டத்தால், அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உயிரிழப்பு
இதுகுறித்து, மின்ட் மாடர்ன் சிட்டியைச் சேர்ந்த ஜி.எஸ்.நிலோபர், 36, கூறியதாவது:
நான் பள்ளியில் படிக்கும்போது சுரங்கப்பாதை பணி துவங்கியது. தற்போது என் மகனுக்கு 16 வயது ஆகிவிட்டது. அவனும் பள்ளிக்கு சென்று வரும்நிலையில், இப்பணிக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
மாணவர்கள் தினமும் பள்ளிக்கு தாமதமாக செல்ல நேர்வதால், படிப்பு பாதிக்கப்படுகிறது. சுரங்கப்பாதை பணி முடியாததால், பலர் உயிரிழந்து உள்ளனர்.
கர்ப்பிணி ஒருவரை ரிக் ஷாவில் அமர வைத்து, ரயிலில் ஏற்றி இறக்கினர். நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் ஒருவர் உயிரிழந்தார்.
தற்போதைய எம்.எல்.ஏ., சுரங்கப்பாதை பணிகளை உடனே முடிந்து தருவதாக கூறி ஓட்டு கேட்டார். ஆனால் அவர், பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை பணிகள் முடிவடையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு கிடைக்கவில்லை
மின்ட் மாடர்ன் சிட்டி, போஜராஜன் நகர், சீனிவாசபுரம் பகுதியில் ஒட்டு மொத்த மக்களும், ரயில் தண்டவாளம் வழியாக தான் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முடியும். கடந்த 2010ல் சுரங்கப்பாதை பணிகள் துவங்கின. பலக்கட்ட காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அரசியல் கட்சிகள், அமைப்புகள், அரசு அதிகாரிகள், நீதிமன்றம் என அனைத்தையும் நாடியும், இதுவரை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த அவலம் தொடரக் கூடாது.
- பி. இப்ராகிம்ஷா, 57,
போஜராஜன் நகர்
மே மாதம் முடிக்கப்படும்
ரயில்வே சுரங்கப்பாதை பணியின்போது குடிநீர், கழிவுநீர்குழாய்களை சீராக இல்லாமல் இருந்ததால், 'மிக்ஜாம்' புயலின்போது குழாயில் நீர்கசிவு ஏற்பட்டது. இதனால், குழாய்களை மீண்டும் சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மே மாத இறுதிக்குள், பணிகள் முடிக்கப்படும்.
- 'ஐட்ரீம்' மூர்த்தி
தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ராயபுரம் தொகுதி.