UPDATED : ஜூலை 01, 2026 06:12 PM
ADDED : ஜூலை 01, 2026 05:12 PM
குன்றத்துார்: பீஹார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 20. திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, தொழிற்பேட்டை 8வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கிருஷ்ணகுமார் பணம் தர மறுத்ததால், பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கிருஷ்ணகுமார் கீழே விழுந்ததும், மொபைல் போன் மற்றும் 500 ரூபாயை பறித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த திருமுடிவாக்கம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண், 19, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரியாசுதீன், 19, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
குட்கா வைத்திருந்த மூவர் கைது
சென்னை:சென்னையில் வெவ்வேறு இடங்களில் குட்கா புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டை போலீசார் காலை, சுப்புராயர் நகர், இளங்கோ சாலை சந்திப்பு அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மூட்டையில் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து குட்கா புகையிலை கடத்தலில் ஈடுபட்ட, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகாயவசந்தன், 29, அமைந்தகரையைச் சேர்ந்த உதயகுமார், 32 ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 88 கிலோ எடையிலான குட்கா புகையிலைப் பொருட்கள், 2 மொபைல்போன், கார் மற்றும் இருசக்கர வாகனம் தலா ஒன்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அண்ணாநகரில் மாவா தயாரித்து விற்று வந்த தர்மராஜ், 50 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 73 கிலோ மாவா, கிரைண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவு குற்றவாளி கைது
டி.பி.சத்திரம்: டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், 40, என்பவரை கொன்ற வழக்கில், 2017ல் கைது செய்யப்பட் ரஞ்சித்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் வந்த ரஞ்சித்குமார், சென்னை உயர் நீதிமன்ற 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த ஜூன் 1ல் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து டி.பி.சத்திரம் பகுதியில் பதுங்கியிருந்த ரஞ்சித்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைத்தனர்.
