ADDED : ஆக 21, 2026 09:22 PM
கே.கே.நகர், ஆக. 22–
சாலிகிராமத்தில் இருதரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலில், எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமம் விஜயராகவபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 23. அதே பகுதியை சேர்ந்த சரண், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததை சாமுவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து சரண் தன் நண்பர்களான நரேஷ், சாம்சன் உள்ளிட்டோருடன் வந்து சாமுவேலை கத்தியால் வெட்டினார். படுகாயமடைந்த சாமுவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் சரண் கைது செய்யப்பட்டார்.
ஆத்திரமடைந்த சாமுவேலின் சகோதரர்கள் சதீஷ், சசி தலைமையிலான கும்பல், விஜயராகவபுரம் 5வது தெருவில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு ஆட்டோக்கள் மற்றும் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியது.
கே.கே.நகர் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை சேதப்படுத்தியதாக தி.மு.க., நிர்வாகிகள் முருகன், சசி, சதீஷ் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
கோவில் திருவிழாவையொட்டி வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்ற வாசகங்கள் தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே மோதலாக வெடித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
