/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துர்நாற்றம் வராமல் கழிவுநீர் சுத்திகரிப்பு புது தொழில்நுட்பத்தில் வாரியம் முயற்சி
/
துர்நாற்றம் வராமல் கழிவுநீர் சுத்திகரிப்பு புது தொழில்நுட்பத்தில் வாரியம் முயற்சி
துர்நாற்றம் வராமல் கழிவுநீர் சுத்திகரிப்பு புது தொழில்நுட்பத்தில் வாரியம் முயற்சி
துர்நாற்றம் வராமல் கழிவுநீர் சுத்திகரிப்பு புது தொழில்நுட்பத்தில் வாரியம் முயற்சி
ADDED : ஜூலை 25, 2025 12:14 AM
சென்னை, கழிவு நீரேற்று நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும்போது எழும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக, 'ஸ்க்ரப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை, வாரியம் பயன்படுத்த உள்ளது.
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குடிநீர் வாரியத்தின் கழிவு நீரேற்று நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இவை பெரும்பாலும் குடியிருப்புகள், பூங்கா, சாலையோரம் அமைக்கப்பட்டு, கழிவுநீரை சுத்திகரித்து குழாய் மூலம், தொழில் நிறுவனங்களின் தேவைக்கு வினியோகிக்கப்படுகிறது; எஞ்சிய நீர் கடலில் விடப்படுகிறது.
இவ்வாறு சுத்திகரிப்பு செய்வதால், கழிவு நீரேற்று நிலையங்களில் இருந்து வெளியேறும் மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு வாயுக்களால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இந்நிலையங்களை சுற்றி வசிக்கும் மக்கள், சுவாச பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை அகற்றக்கோரி, அவ்வப்போது போராட்டம் செய்கின்றனர். சில இடங்களில் புதிதாக கழிவு நீரேற்று நிலையங்களை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 'ஸ்க்ரப்பர்' எனும் துர்நாற்றத்திற்கு காரணமான வாயுக்களை உறிஞ்சி அழிக்கும் தொழில்நுட்பத்தில் நிலையங்களை இயக்க, வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மொத்தமுள்ள 371 கழிவு நீரேற்று நிலையங்களில் 46 நிலையங்களில் முதற்கட்டமாக 5.5 கோடி ரூபாயில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணியை ஆறு மாதங்களில் முடிக்க, வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அதிகமான வீடுகள் உள்ள பகுதி மற்றும் அதிக திறன் உடைய கழிவு நீரேற்று நிலையங்களில், 'ஸ்க்ரப்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது, துர்நாற்றத்திற்கு காரணமான வாயுக்களை உறிஞ்சி எடுத்து அழித்து விடும். பின், வெளியேறும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசாது.
கொளத்துார், மயிலாப்பூர் நீரேற்று நிலையங்களில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதில், பெரிய அளவில் பயன் கிடைத்தது. அனைத்து நீரேற்று நிலையங்களிலும், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். புதிதாக அமைக்கும் நிலையங்கள், இந்த தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.