/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாமில் படகு சவாரி; நீர்வழி போக்குவரத்துக்கு கும்டா பரிந்துரை
/
பகிங்ஹாமில் படகு சவாரி; நீர்வழி போக்குவரத்துக்கு கும்டா பரிந்துரை
பகிங்ஹாமில் படகு சவாரி; நீர்வழி போக்குவரத்துக்கு கும்டா பரிந்துரை
பகிங்ஹாமில் படகு சவாரி; நீர்வழி போக்குவரத்துக்கு கும்டா பரிந்துரை
UPDATED : ஆக 05, 2025 11:25 AM
ADDED : ஆக 05, 2025 12:09 AM

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து, சென்னை நேப்பியர் பாலம் வரை, பகிங்ஹாம் கால்வாயில் பயணியர் படகு சவாரி செய்யும் வகையிலான நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல் பாட்டில் உள்ளது.
இதற்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவை அடுத்து, மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில், புதிய பொது போக்குவரத்து சேவையை துவக்குவது குறித்து, கும்டா அதிகாரிகள் ஆலோனை கூட்டங்களை நடத்தினர்.
இதில், சாலை, ரயில் ஆகியவற்றுக்கு அப்பால், சென்னையில் நீர்வழி பொது போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த முடிவானது.
வாய்ப்புகள் அதிகம் நாட்டிலேயே முதல் முறையாக, கேரள மாநிலம் கொச்சியில், 'வாட்டர் மெட்ரோ' என்ற பெயரில், புதிய வகை நீர்வழி போக்குவரத்து திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதற்கு, அங்குள்ள மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கொச்சி நகரின் வாட்டர் மெட்ரோ திட்டத்தை அடிப்படையாக வைத்து, சென்னையில் வாட்டர் மெட்ரோ எனப்படும் நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த, கும்டா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, கும்டா அழைப்பின் பேரில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முதல், சென்னை நேப்பியர் பாலம் வரை, கிழக்கு கடற்கரை சாலையை மையப்படுத்தி, நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல் படுத்தலாம்.
திட்டத்தில், பகிங்ஹாம் கால்வாயில், அதிநவீன மின்சார பயணியர் படகுகள் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குறைந்த முதலீட்டில் அதிக மக்கள் பயன் படுத்தும் வகையில் இந்த சேவையை செயல்படுத்தலாம். மின்சார வாகனங்கள் போல், இதற்கான அதிநவீன படகுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு ஆகியவற்றிலும் எதிர்காலத்தில், 'வாட்டர் மெட்ரோ' சேவையை துவங்கலாம் என, கும்டா அதிகாரிகள் நீண்ட விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தலாம் என, தமிழக அரசுக்கும், கும்டா பரிந்துரை செய்துள்ளது.
திட்ட அறிக்கை பணி இதுகுறித்து, கும்டா அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன், குளு குளு வசதியுடன் மெட்ரோ ரயில் சேவை வரும் என்றபோது, அனைவரும் வியப்பாக பார்த்தனர்; இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றனர்.
ஆனால் சென்னையில் மெட்ரோ ரயில் வசதி வந்ததும், மக்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.
அதுபோலத்தான், நீர்வழி போக்குவரத்து திட்டமு ம். ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். அதை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய உள்ளோம்.
கிழக்கு கடற்கரை சாலையில் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில், மாமல்லபுரம் முதல் நேப்பியர் பாலம் வரை, 53 கி.மீட்டரில் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது.
முதற்கட்டமாக, முட்டுக்காடு - நேப்பியர் பாலம் வரை, 30 கி.மீ., செயல்படுத்தலாம். தொடர்ந்து, மாமல்லபுரம் வரை நீட்டிக்கலாம்.
தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்தும் நிச்சயம் சாத்தியப்படும். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அ வர்கள் கூறினர்.