/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறை மேல் வசித்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு
/
கழிப்பறை மேல் வசித்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு
ADDED : ஆக 05, 2025 12:10 AM
வடபழனி, மாநகராட்சி கழிப்பறையின் மேல் தளத்தில் ஐந்து ஆண்டுகளாக வசித்த பெயின்டர், மது போதையில் துாக்கத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
வடபழனி, ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 52. இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து, இங்குள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறையின் மீது, ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்தார்.
பெயின்டரான கிருஷ்ணமூர்த்தி, 9 அடி நீளம் 25 அடி அகலம், 10 அடி உயரமுடைய பொது கழிப்பறையின் மீது, தன் பொருட்களுடன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பொது கழிப்பறையின் மேல், மது போதையில் துாங்கி கொண்டிருந்தார். துாக்கத்தில் உருண்ட அவர், அதிகாலையில் கீழே விழுந்தார்.
இதில், தலையில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார். வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுபோல் பலரும், தங்க இடமின்றி மாநகராட்சி கழிப்பறை மீது மது போதையில் துாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அவர்கள் தங்க மாற்று இடம் வழங்க வேண்டும்.

