ADDED : அக் 05, 2025 12:22 AM
சென்னை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு, இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று மதியம் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள், நடிகையின் வீட்டிற்கு தொடர்பு கொண்டபோது 'நீங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை எப்படி நம்புவது' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.
'நாங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தான்' என, போலீசார் தெரிவித்தும், அவர்கள் ஏற்கவில்லை. வேறு வழியின்றி போலீசார், நடிகையின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதற்குள், அவர்கள் வீட்டை பூட்டி சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் விசாரித்ததில், தற்போது தான் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றதாக பதில் அளித்துள்ளனர்.
இதனால், சோதனை ஏதும் மேற்கொள்ளாமல், வெடிகுண்டு நிபுணர்கள் திரும்பிச் சென்றனர்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி, முன்னாள் டி.ஜி.பி., நடராஜ், ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
யார் வீட்டிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்தது யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.