ADDED : செப் 21, 2025 10:39 PM
சென்னை:ஆயிரம்விளக்கு பகுதியில், வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து, உள்ளே நுழைந்து இரண்டரை சவரன் நகை, 38,000 ரூபாய் திருடிய வாலிபர் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, ஆயிரம்விளக்கு, சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி, 42. இவர், கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி மீனாட்சி மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்.
மாலையில் வீடு திரும்பினர். அப்போது, ஜன்னல் கம்பிகள் ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு வளைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த, இரண்டரை சவரன் நகை மற்றும் 38,000 ரூபாய் திருடு போய் இருந்தது. இது குறித்து மீனாட்சி ஆயிரம் விளக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், ஆயிரம்விளக்கைச் சேர்ந்த ஜீவா, 20, என்பவரை கைது செய்தனர். இவருடன் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.
சிறுவர்கள் இருவரும், கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள, சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.