/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3வது நாளாக முடங்கிய பி.எஸ்.என்.எல்., :செய்வதறியாது விழிக்கும் அதிகாரிகள்
/
3வது நாளாக முடங்கிய பி.எஸ்.என்.எல்., :செய்வதறியாது விழிக்கும் அதிகாரிகள்
3வது நாளாக முடங்கிய பி.எஸ்.என்.எல்., :செய்வதறியாது விழிக்கும் அதிகாரிகள்
3வது நாளாக முடங்கிய பி.எஸ்.என்.எல்., :செய்வதறியாது விழிக்கும் அதிகாரிகள்
ADDED : டிச 23, 2025 05:01 AM
சென்னை: சென்னையின் சில பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சேவைகள் மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செய்வதறியாதும், வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியாமலும் அதிகாரிகள் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., மத்திய மண்டல அலுவலகத்தில், கடந்த 20ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. எட்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 'மொபைல் சுவிட்ச் ரூம்' எனும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் மாநகரில் மொபைல் போன் சிக்னல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை டெலிகாம் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாக, வடசென்னை மற்றும் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் சிக்னல் பிரச்னை அதிகமாக உள்ளது. மொபைல் போனுக்கு ஓ.டி.பி.,யும் வருவதில்லை காவல் மற்றும் மருத்துவ அவசரத்துக்கு பயன்படும் உதவி எண்களான 100 மற்றும் 108 உள்ளிட்டவற்றையும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என, வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது:
மூன்று நாட்களாக மொபைல் போனில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் யாரையும் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால், ஓரிரு நாட்களில் சரியாகும் என்கின்றனர்.
உங்களுக்கு பிரச்னை இருந்தால் வேறு நிறுவனத்தின் 'சிம் கார்டு' வாங்கி பயன்படுத்துங்கள், என அலட்சியமாக கூறுகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம்.
தொலைத்தொடர்பு துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

